சுமார் 12 லட்சம் கிராமப்புற மக்களுக்கு ஊரக டிஜிட்டல் தொழில் முனைவோர் வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஒடிசா தலைநகர் புபனேஷ்வரில் தகவல் தொழில்நுட்ப மையம் துவக்க நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் கலந்துகொண்டார். அப்போது அவர், “மூன்று லட்சம் பொது சேவை மையங்களால் ஊரக டிஜிட்டல் தொழில் முனைவோர் உருவாகியுள்ளனர். இவர்களால் ஏழை மக்களுக்கு டிஜிட்டல் சேவைகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், 12 லட்சம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரமும் உருவாகியுள்ளது.
உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தால் வெளிப்படைத்தன்மையும், ஏழை மக்களுக்கு சலுகைகளும் சென்றடைந்தது மட்டுமல்லாமல், ரூ.90,000 கோடியை அரசு சேமித்துள்ளது. டிஜிட்டல் ஆட்சி முறையே சிறந்த, நேர்மையான முறை” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “புதிய உள்கட்டமைப்பால் தொழில் முனைதலும், புதிய மேம்பாடுகளும், வேலைவாய்ப்புகளும் ஒடிசா மாநிலத்தில் உருவாகும் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
