கபடி விளையாட்டுப் போட்டி இல்லாத ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் தின விழாவையோ, கல்லூரி விழாக்களையோ பார்ப்பது அரிது. ஏன், ஊர்த் திருவிழாக்களில்கூட கபடிப் போட்டிகள் நடத்தி பரிசளிக்கும் வழக்கம் இருந்தும், ஒரு நிலைக்குமேல் இந்தியாவில் கபடி விளையாட்டுக்குக் கொடுக்கப்படும் ஒத்துழைப்பு குறைவுதான். சரியான ஊக்குவிப்பும், உதவிகளும் இல்லாமல், சிறந்த கபடி விளையாட்டு வீரர்களுக்கான அங்கீகாரம் என்பது கிடைக்காமலே இருந்த சமயத்தில் உருவானதுதான் ப்ரோ கபடி லீக். தொடர்ந்து, மூன்று சீசன்களாக சிறந்த கபடி வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திவரும் ப்ரோ கபடி லீக்-கின் கடைசி சீசன், ரசிகர்களின் மகத்தான ஆதரவைப்பெற்று வெற்றியடைந்தது. டாப் 5 வீரர்களின் பட்டியல்.
1. கஷிலிங் அடேக் : சிறந்த ரைடருக்கான விருதுபெற்ற இவர்தான், முதல் இடத்துக்குத் தகுந்தவர் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அதிக ரைடிங் பாய்ண்ட் பெற்றிருப்பவரும், மொத்த டீமின் ரைடிங் பாய்ண்டில் பாதியை வென்று கொடுத்தவருமான, கஷிலிங் அடேக் முதலிடத்தில் இருப்பது தவறில்லை. தபாங் டெல்லி அணியினர் முதல் நான்கு இடத்தில் சீசனை முடிப்பதற்கு மிகப்பெரிய காரணம் அடேக் தான். அடுத்த சீசனில் கஷிலிங் அடேக்கின் ரைடிங்கை உடைப்பேன் என, முந்தைய சீசனில் பல வீரர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2. ராஹுல் சௌத்ரி : அதிக பாய்ண்ட்டுகள் பெற்று முதலிடத்தில் இருந்த ராஹுல் சௌத்ரிக்கு, கஷிலிங்கின் ஓவர்டேக் வருத்தமாகத்தான் இருந்திருக்கும். தொடக்கத்திலிருந்தே சிறப்பான விளையாட்டால் முதலிடத்திலிருந்த ராஹுலை இரண்டாம் இடத்துக்குத் தள்ளினார் அடேக். ஆனாலும் ராஹுல் இடம்பெற்றிருக்கும் தெலுகு டைட்டன்ஸ் இரண்டாம் இடத்தில் சீசனை முடித்ததோடு, ராகுலும் அதிக பாய்ண்ட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையுடன் அடுத்த சீசனுக்குக் காத்திருக்கிறார்.
3. அஜய் தக்குர் : தோற்றுப்போன அணியின் வீரருக்கு, அந்த ஆட்டத்தின் ஸ்டார் ப்ளேயர் விருது கொடுக்கப்பட்டால் அது அவரது அபரிமிதமான திறமையைக் காட்டுவதாக அர்த்தம். அப்படி, தெலுகு டைட்டன்ஸுடன் நடைபெற்ற செமி ஃபைனல்ஸ் போட்டியில், பெங்களூரு புல்ஸ் டீமின் ஸ்டார் ரைடர் அஜய் தக்குர் பெற்ற ஸ்டார் ப்ளேயர் விருது சாதாரணமானது அல்ல; தக்குரும் சாதாரணமானவர் அல்ல. சீசனின் முதல் பாதி ஆட்டங்கள் முடிந்தபிறகு, ஒருவர் மிகத் திறமையுடன் விளையாடுகிறார். தொடர்ந்து எல்லா ரைடிலும் பாய்ண்டை அள்ளுகிறார். அவரிடம் யாருமே நெருங்க முடியவில்லை. இப்படியெல்லாம் பேசப்பட்டு, சீசனில் இரண்டாம் பாதியிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கி, அடுத்த சீசனுக்கு அதிக டீம்கள் விலைக்கு வாங்க முன்வந்திருக்கும் வீரர் என்ற பெருமையுடன் காத்திருக்கிறார் அஜய் தக்குர்.
4. அனுப் குமார் : கபடி லீக் அணிகளின் கேப்டன்களில் சிறந்த கேப்டனாக பாராட்டப்பட்டவர். ஆக்ரோஷமான சமயங்களிலும் அமைதியாக விளையாடி, பல உத்திகளைக் கையாண்டு தனது அணியை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றவர் அனுப் குமார். அதேசமயம், நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ரைட் சென்று பாய்ண்ட்களை கைப்பற்றுவதும் இவரது திறமை. கடைசி ஃபைனலில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில், ஸ்டார் ப்ளேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனுப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சீசனுக்கான ஏலத்தில் இவரது பெயரும் ஹாட் கார்ட்களில் இருக்கிறது.
5. ஷபீர் பாபு ஷர்ஃபுதீன் : கபடி உலகின் சிறந்த ப்ளேயர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷபீரின் ஆட்டம், கடந்த ஃபைனலில் எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒன்று. ஃபைனல் ஆட்டத்தை ஃபைனல்போலவே விறுவிறுப்புடன் கொண்டுசென்ற பெருமை ஷபீரைச் சேரும். ஒவ்வொரு ரைடிலும் பாய்ண்டை ஏற்றி எதிரணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி, வெற்றிபெற்ற கடைசி ரைட் சென்றவரும் இவர்தான். தற்போது இருக்கும் அணியிலேயே அடுத்த சீசனிலும் ஷபீர் விளையாடுகிறார். இல்லையென்றால், அதிக விலைக்கு ஏலம் பேசப்பட்ட கபடி வீரர் என்ற பெயரை இவர் பெற வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.
இந்திய தேசிய அணியின்மீது இல்லாத அக்கறை, இந்த லீக் மேட்ச் விளையாடும் அணிகளின்மீதும், வீரர்களின்மீதும் ஏன்? என்று கேட்கலாம். 2004ல் தொடங்கிய கபடி உலகக் கோப்பையை, 2014 வரை நடைபெற்ற 7 உலகக் கோப்பையிலும் இந்தியாதான் வெற்றிபெற்று வந்திருக்கிறது. மூன்று பெண்கள் உலகக் கோப்பையிலும் இந்தியாதான் வெற்றியைப் பெற்றிருக்கிறது. மற்ற விளையாட்டுகளைப்போலவே இதிலும் பாகிஸ்தானே, இந்தியாவின் வைரியாக இருந்துவருகிறது. ஆனாலும் கபடிக்கு மக்களிடம் கிடைக்கும் ஆதரவு என்பது இல்லை. கபடி ரசிகர்கள் மட்டும்தான் இவற்றை தேடிப்பிடித்து தெரிந்துகொள்கிறார்கள். எந்த விளையாட்டிலும் லீக் மேட்ச்சுகளில் அதிகம் கலந்துகொண்டு திறமையை நிரூபிக்கும் வீரர்களை, தேசிய அணியின் தேர்வாளர்கள் எளிதாகக் கண்டுபிடித்து, வாய்ப்பளித்து தங்கள் அணியை பலம்பொருந்தியதாக உலகளவில் நடக்கும் விளையாட்டுகளுக்கு அனுப்புவார்கள். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு இல்லாத அளவு ரசிகர்கள், கபடி லீக் மேட்ச்சுகள் நடைபெறத்தொடங்கிய பிறகு உருவாகிவிட்டனர். லீக் போட்டியில் விளையாடும் வீரர்களும் பணக்காரர்களோ, பணக்காரர்களின் பினாமிகளோ அல்ல. பெரும்பாலானோர், வாழ்க்கைக்காக வேறொரு துறையில் போராடிக்கொண்டு கபடியிலும் சிறந்து விளங்குபவர்கள்தான்.,”
