புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்காக நிதியுதவி வழங்க பாலிவுட் நடிகர் சல்மான் கான் முன்வந்துள்ளார்.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 44 வீரர்களின் குடும்பங்களுக்கு பல தரப்புகளிலும் நிதியாதரவு திரட்டி வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் என்ற கணக்கில் ஒட்டுமொத்தமாக ரூ.2.45 கோடியை வழங்கவுள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமிதாப் பச்சனின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், “உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை அமிதாப் பச்சன் வழங்கவுள்ளார். தற்போது அதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான சல்மான் கானும் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளார். இதற்காக அவர் நடத்தி வரும் ‘பீயிங் ஹியூமன்’ அறக்கட்டளை வாயிலாக நடிகர் சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். சல்மான் கானின் முயற்சிக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது நாட்டுக்காக, நமது குடும்பங்களை காப்பதற்காக உயிர்நீத்த ஜவான்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் நான் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
