உலக அளவில் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஒருபக்கம் அரசே பல்வேறு சட்டங்களைப் போட்டு அவர்களைச் சிறையில் அடைத்துவிடுகிறது. மறுபக்கம் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்து தேசியவாதிகளை விமர்சிப்பதற்கு, மரணத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பது ஊடகவியலாளர்கள் தலையில் எழுதப்படாத விதியாக உள்ளது.
கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட அதே கர்நாடகாவில்தான் எழுத்தாளர் கல்புர்கி 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டார். கௌரி போன்றே இவரையும் வீட்டில் வைத்து மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். இன்றுவரை அவர்கள் மர்ம நபர்களாகவே உள்ளனர். கல்புர்கி கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறிவருகின்றனர். மூட நம்பிக்கைகளுக்கும் இந்துத்துவக் கொள்கைகளுக்கும் எதிராகத் தனது எழுத்தின்மூலம் போர் தொடுத்த அவர் இறுதியில் துப்பாக்கி மூலம் வீழ்த்தப்பட்டார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. எழுத்தாளர், மருத்துவர், சமூக செயல்பாட்டாளர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தாலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்காகவே இவர் பெரிதும் அறியப்படுகிறார். மூட நம்பிக்கைகளுக்கும் போலிச் சாமியார்களுக்கும் எதிராகத் தீவிரமாகச் செயல்பட்ட இவர் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நடைப்பயிற்சி செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை தொடர்பாக சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இன்னும் பின்னோக்கிச் சென்றால், 2012ஆம் ஆண்டு கர்நாடகாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் லிங்கன்னா சத்யம்பெட் கால்வாய் ஒன்றில் பிணமாகக் கிடந்தார். அரசியல், சமூகப் பிரச்னைகள் தொடர்பாக இறுதிவரை எழுதிவந்த அவரது மரணத்துக்கும் விடை தெரியாமலேயே உள்ளது.
மரணமே பரிசு!
மேற்கூறிய சம்பவங்கள் மூலம், இந்துத்துவத்தை விமர்சித்துவந்த அனைவருக்கும் மரணமே பரிசாகக் கிடைத்துள்ளதை அறியலாம். தங்களை விமர்சிப்பவர்களை, விமர்சிக்கலாம் என்று எண்ணுபவர்களை அவர்கள் எவ்வாறு மிரட்டி வைத்துள்ளனர் என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சுட்டிக்காட்டுவது சரியாக இருக்கும்.
இடதுசாரி தலைவரான கோவிந்த் பன்சாரே 2014ஆம் ஆண்டு மும்பையில் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த சமிர் கெயிக்வாட் என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சனாதன் சன்ஸ்தா அமைப்பினர் பத்திரிகை சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்துப் பத்திரிகையாளர்களையும் புகைப்படம் எடுத்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இயக்குநர் ஆனந்த் பட்வர்தனுக்கு நேரிடையாகவே எச்சரிக்கை விடுத்தனர். சனாதன் சன்ஸ்தா மட்டுமல்ல அதே மனநிலையுடன் உள்ள பல அமைப்புகளின் முகம் இதுதான். தங்களை எதிர்ப்பவர்களை எப்படியாவது பணிய வைக்க வேண்டும். அது முடியாவிட்டால் அவர்களையே முடித்துவிட வேண்டும்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இந்துத்துவம் என்பது தொடர்ந்து வலுப்பெற்றே வருகிறது. இந்துத்துவத்தை எதிர்த்துவந்த எழுத்தாளர்கள் கே.எஸ்.பகவான், யோகேஷ் பாஞ்சேஜிரே ஜெயப்பிரகாஷ், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவரான கே.எஸ்.நிர்மலா, மூத்த பத்திரிகையாளரும் கர்நாடகா முதல்வரின் ஊடக ஆலோசகருமான தினேஷ் அமின் மாட்டு போன்றவர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.
ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளை விமர்சித்தார் என்ற காரணத்துக்காகவே சீத்தாராமன் என்ற ஊடகவியலாளர் 2013இல் கைது செய்யப்பட்டார். இதுபோல் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர் நடத்திய தாக்குதலைப் படம் பிடித்தார் என்பதற்காக நவீன் என்ற தொலைக்காட்சி செய்தியாளர் கைது செய்யப்பட்டார். நான்கு மாதங்கள் சிறையில் இருந்த அவர் மீதான வழக்கு இன்றும் தொடர்கிறது.
ஊடகவியலாளர்களுக்கு வரும் ஆபத்துகள் என்பது அழுத்தமாகவும் விரைவாகவும் வருகின்றன. தங்களை எதிர்ப்பவர்களின் வளர்ச்சியை உடனடியாகத் தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் தரவுப்படி 1992ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை இந்தியாவில் 40 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கணக்கில் வந்த எண்ணிக்கை மட்டுமே இது. உலகளாவிய பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின்படி மொத்தமுள்ள 180 நாடுகளில் இந்தியா 135ஆவது இடத்தில் உள்ளது. இத்தனைக்கும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது என்ற பெருமை வேறு.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு இந்தியாவின் எந்த அரசுமே முனைப்பு காட்டவில்லை என்பது வேதனை. கல்புர்கி கொலை செய்யப்பட்டபோது, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று சித்தராமய்யா தெரிவித்தார். ஒருவேளை, அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால், அரசின் மீது குற்றவாளிகளுக்குப் பயம் வந்திருக்கும். கௌரி கொலையும் இன்று நிகழ்ந்திருக்காது. ஆனால், தங்களுக்கு எதிராகச் செயல்படும் பத்திரிகையாளர்களை யார் என்ன செய்தால் நமக்கென்ன என்ற நினைப்பிலேயே பல ஆட்சியாளர்களும் இன்று உள்ளனர். அவர்கள் மனது மாறும்வரை இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் என்பது வெறும் கானல் நீரே.
நன்றி: http://www.thehoot.org
சுருக்கமாகத் தமிழில்: முருகேஷ்










