இஸ்ரேலைக் கட்டித் தழுவும் இந்தியா!

Published On:

| By Balaji

உலக அரசியல் பழகு -9 ஆரா

இஸ்ரேல் மீதான காங்கிரஸ் இந்தியாவின் பார்வை, பின் வாஜ்பாய் இந்தியாவின் பார்வை, இப்போது மோடி தலைமயிலான இந்தியாவின் பார்வை என்று நிலைப்பாடுகளில் மாற்றம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இஸ்ரேலுடனான முழுமையான அரசியல் உறவுகளை கட்டியெழுப்ப காங்கிரஸ் தயங்கியது உண்மை. அதன் பின், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இஸ்ரேலுடன் இணக்கமாகப் போனது. இப்போதைய மோடி தலைமையிலான இந்திய அரசு இஸ்ரேலைக் கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

அதன் உதாரணம்தான் ஐ.நா. வரலாற்றில் முதன் முறையாக இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்ததும், அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு இந்தியாவுக்கு நன்றி சொல்லியிருப்பதும்.

ஐ.நா.வின் பொருளாதார, சமூக கவுன்சில் (UN’s Economic and Social Council) அவையில் பாலஸ்தீன பகுதியைச் சேர்ந்த ஷாஹித் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், பார்வையாளர் அந்தஸ்தினைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஐ.நா.வின் தொண்டு நிறுவனங்களுக்கான கமிட்டியிடம் விண்ணப்பித்திருந்தது. ஐ.நா.வின் தொண்டு நிறுவனங்களுக்கான கமிட்டி இந்த விண்ணப்பத்தை ஆராய்ந்து, பொருளாதார சமூக கவுன்சிலுக்கு அனுப்பும். அந்த கமிட்டிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. உலகம் எங்கிருந்தும் இவ்வாறு அனுப்பப்படும் தொண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்களை, தொண்டு நிறுவனங்கள் கமிட்டி முதல் கட்டப் பரிசீலனைக்குப் பிறகு தனக்கு அனுப்பும்போது பொருளாதார சமூக கவுன்சில் வழக்கமாக அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும். இதுபோல் நம்மூரில் இருந்தும் பல தொண்டு நிறுவனங்கள் ஐ.நா.வில் போய் அறிக்கை வாசிப்பதையும், பிரச்சினைகளை எழுப்புவதையும் ஜனநாயக இந்தியாவில் பார்த்துவருகிறோம்.

ADVERTISEMENT

ஆனால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் எரிந்துவரும் பிரச்சினையால், வழக்கமான இந்த ஐ.நா.வின் நடைமுறையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஐ.நா.வின் பொருளாதார, சமூக கவுன்சில் பாலஸ்தீனத்தின் தொண்டு நிறுவனமான ஷாஹித்துக்குப் பார்வையாளர் அந்தஸ்து வழங்கிவிட்டால் பாலஸ்தீனத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை அது ஐ.நா.வின் பார்வைக்கு கொண்டுவரும். உலக நாடுகளின் பிரதிநிதிகளிடம் காசா நதிக்கரையில் நடக்கும் பல்வேறு அவலங்களை ஆவணப்படுத்த அந்தத் தொண்டு நிறுவனம் முயற்சிக்கும் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

இந்த நிலையில்தான் ஐ.நா. பொருளாதார, சமூக கவுன்சிலில் இஸ்ரேல் ஒரு வரைவைத் தாக்கல் செய்கிறது. ‘பாலஸ்தீன தொண்டு நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்’ என்பதே அதன் ஒற்றை முழக்கம்.

ADVERTISEMENT

“தொண்டு நிறுவனமான ஷாஹித் பாலஸ்தீனத்தில் இருக்கும் பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் அமைப்போடு தனக்கு இருக்கும் தொடர்புகளைப் பற்றிய தகவல்களை ஐ.நா.விடம் மறைத்திருக்கிறது. எனவே இந்தத் தொண்டு நிறுவனத்துக்கான அங்கீகாரம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்பதே இஸ்ரேல் கொண்டுவந்த தீர்மானத்தின் சாராம்சம்.

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து இஸ்ரேல் தொடர்பான ஐ.நா. விவகாரங்களில் நீக்கு போக்காகவே நடந்துகொண்டுள்ளது. அதுவும் பாலஸ்தீன விவகாரங்களில் இஸ்ரேல் உலக சட்டங்களை மீறி வன்முறையாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில், எல்லோர் முன்னிலையிலும் இஸ்ரேலின் தோளில் கை போட்டுக்கொள்ள இந்தியா விரும்பவில்லை.

ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. இஸ்ரேலின் தோளில் கை போடக்கூடத் தயங்கிய காலம் போய், இப்போது இஸ்ரேலைக் கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறது மோடியின் இந்தியா. ஐ.நா. பொருளாதார சமூக கவுன்சிலில் பாலஸ்தீன தொண்டு நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஆம்… முதன் முறையாக ஐ.நா.வில் இஸ்ரேலை இந்தியா ஆதரித்திருக்கிறது. இது இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அதேநேரம் பாலஸ்தீனத்திலோ, ‘இந்தியா நம்மைக் கைவிட்டுவிட்டது’ என்ற குரலை எழுப்பத் தொடங்கினார்கள்.

ஐ.நா. பொருளாதார சமூக கவுன்சிலில் மொத்தம் பதிவான ஓட்டுகளில் இஸ்ரேலை ஆதரித்து 28 வாக்குகள் பதிவாகின. 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஐந்து நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. இஸ்ரேலை ஆதரித்த நாடுகளில் முக்கியமானவை பிரேசில், கனடா, கொலம்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, அயர்லாந்து, ஜப்பான், கொரியா, உக்ரைன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவை.

இந்திய வெளியுறவுக் கொள்கை சமீபகாலமாகப் போகும் பாதையை கவனிப்பவர்களுக்கு இந்தியாவின் இந்த நிலைப்பாடு அதிர்ச்சியைத் தராது என்றாலும், மேற்குக் கரையில் நடக்கும் படுகொலைகளைப் பார்த்தும் இந்தியா இப்படி ஒரு நிலைப்பாடு எடுத்திருக்கிறதே என்ற விசும்பல்களும் உலக அரங்கில் கேட்கத்தான் செய்கின்றன.

ஜூன் 6 ஆம் தேதி ஐ.நா.வின் வரலாற்றில் முதன் முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததும், இந்தியாவிலுள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் துணைத் தலைவர் மாயா குடோஷ் ஒரு நன்றி அறிவிப்பை வெளியிட்டார்.

“நன்றி இந்தியா நன்றி… தீவிரவாத அமைப்பான ஷாஹித், தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் ஐ.நா.வில் நுழைவதைத் தடுக்க இஸ்ரேலோடு ஒத்துழைத்தமைக்கு நன்றி. பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து நாம் போராடுவோம். ஆசியாவிலிருந்து எங்களுக்கு முதல் நாடாக இந்தியா ஆதரவு அளித்திருப்பது நல்ல அறிகுறி” என்று கூறியிருக்கிறார் மாயா குடோஷ். இங்கே குறிப்பிட வேண்டியது இத்தீர்மானத்தில் சீனா, பாகிஸ்தான் ஆகியவை இஸ்ரேலை எதிர்த்திருக்கின்றன.

ஒரு வாரம் கழித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, “நன்றி இந்தியா நன்றி” என்று இந்தியாவுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

ஷாஹித் பயங்கரவாத அமைப்பா? இந்தியா ஏன் அதை எதிர்த்தது? என்ற குரல்களும் எழ ஆரம்பித்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது.

அது என்ன?

அடுத்த சனிக்கிழமை சந்திப்போம்…

[பகுதி 1](https://minnambalam.com/k/2019/05/04/9)

[பகுதி 2](https://minnambalam.com/k/2019/05/11/17)

[பகுதி 3](https://minnambalam.com/k/2019/05/18/19)

[பகுதி 4](https://minnambalam.com/k/2019/05/25/24)

[பகுதி 5](https://minnambalam.com/k/2019/06/01/14)

[பகுதி 6](https://minnambalam.com/k/2019/06/08/18)

[பகுதி 7](https://minnambalam.com/k/2019/06/15/10)

[பகுதி 8](https://minnambalam.com/k/2019/06/23/21),”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share