ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூரின் ஆடையை விமர்சித்த இணையதளத்தைச் சாடியுள்ளார் நடிகர் அர்ஜுன் கபூர்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என இந்தியத் திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. திடீரென அவர் காலமானது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஸ்ரீதேவியின் இழப்பு ரசிகர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் மிகுந்த வேதனையைத் தந்தது. இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அவருடைய மகள் ஜான்வி கபூர்.
இந்த நிலையில் சமீபத்தில் போனி கபூரின் மகன் அண்ணன் அர்ஜுன் கபூர் வீட்டுக்கு ஜான்வி கபூர் குடும்பத்துடன் சென்றிருந்தார். இதையடுத்து அர்ஜுன் கபூர் வீட்டுக்கு வெளியே தந்தை போனி கபூருடன் ஜான்வி, குஷி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட பாலிவுட் டட்கா என்ற இணையதளம் ஜான்வியின் ஆடை குறித்து மோசமாகக் கருத்து வெளியிட்டிருந்தது. இதற்கு ஜான்வி கபூரின் அண்ணனும் நடிகருமான அர்ஜுன் கபூர் பதிலளித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுபோல மோசமானதை உங்கள் கண்கள் தேடுவது உங்களுக்குத்தான் அவமானம். நமது நாடு இளம்பெண்களை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
