இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை 

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியும், மக்கள் கிளர்ச்சியும், அரசியல் குழப்பங்களும் சென்ற வாரம் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தன. ஏராளமான சாமானிய தமிழ் குடிமக்களையும் சேர்த்துக் கொன்று ஆயுதமேந்திய விடுதலைப் புலிகளை செயல் இழக்க வைத்து, உள் நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சே வரலாற்று நாயகராக விளங்குவதற்கு பதிலாக பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் சிங்கள மக்கள் கிளர்ச்சியினால் பிரதமர் பதவியைத் துறந்து குடும்பத்துடன் கொழும்புவிலிருந்து வெளியேறி கடற்படை பாதுகாப்பில் பதுங்கி உள்ளார். அவர் சகோதரர் கோத்தபய ராஜபட்சே அதிபராக இருந்தாலும் அவரையும் பதவி விலக சொல்லி கிளர்ச்சியாளர்கள் கோருகிறார்கள். அரசியல் நிலைத்தன்மை ஏற்படுமா, பொருளாதார நிலை சீர்படுமா என்பதில் எல்லாம் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. 

ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற போது பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளம் கொண்டதாகவும், விரைவில் வளர்ச்சி பெறக்கூடிய நாடாகவும்தான் இலங்கை இருந்தது எனலாம். ஆனால் அவ்வாறாக வளர்ச்சி பெறத் துவங்கினாலும், அது நீடிப்பதற்கு  பதிலாக இன்று மிகப்பெரிய கடனாளியாகவும், பொருளாதார தற்சார்பை முற்றிலும் இழந்துவிட்ட நாடாகவும், எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிட்ட நாடாகவும் இன்று காட்சியளிக்கிறது. இந்த வீழ்ச்சி, பரிதாபமான நிலை ஏன் ஏற்பட்டது? அதை புரிந்துகொள்வது என்பது இந்திய குடியரசுக்கு மிக அவசியமானதாகும். தேச நலன் என்பதை முற்றிலும் சீர்குலைத்து தேசத்தை புதைகுழிக்கு இட்டுச்செல்லக்கூடிய ஒன்று உண்டென்றால் அது பெரும்பான்மைவாதம்தான் எனலாம். 

ஆனால் இலங்கை பெரும்பான்மைவாதத்தில் வீழ்ந்ததற்கான காரணங்களை விரிவாக அறிந்தால்தான் அது ஏன் அவ்வாறு நடக்கிறது, அதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். பெரும்பான்மைவாதம் என்பது சிங்கள் இனவாதம் என்றாலும், ஏதோ ஒரு சில அரசியல்வாதிகளையோ, புத்த பிக்குகளையோ மட்டும் அதற்கு பொறுப்பாக்க முடியாது. அதன் விரிவான வரலாற்றுப் பின்புலம் தெரிந்தால்தான் முழுமையாக பெரும்பான்மைவாதத்தின் ஊற்றுக்கண்களை அறியமுடியும். 

Image1

இலங்கை  என்பது எப்போது உருவானது

இலங்கை என்பது ஒரு தீவாக சில ஆயிரம் ஆண்டுகள் இருந்திருக்கும் என்று கூறலாம். இந்திய தீபகற்பத்துடன் அதனை பிணைத்த நிலப்பகுதி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியதிலிருந்து அது தீவாகத்தான் இருந்திருக்கும். கோடிக்கரை முதல் இராமேஸ்வரம் வரையிலான பால்க் ஜலசந்தியின் கடல் ஆழம் மிகவும் குறைவு. கோடிக்கரைக்கு கிழக்கேயும், ராமேஸ்வரத்திற்கு தெற்கேயும் கடலின் ஆழம் மிக அதிகம். எனவே கோடிக்கரை முதல், ராமேஸ்வரம் வரையிலான நிலப்பகுதி இலங்கை தீவுடன் இணைந்திருந்து இருக்கும் என்று யூகிக்க இடமுள்ளது. ஆனால் இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம். 

இலங்கையின் இன்றைய பிரச்சினைக்கு அதன் நீண்ட வரலாறோ, சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மக்கள் தொகுதிகளின்    நீண்ட கால வரலாறோ முக்கிய காரணமல்ல. ஏனெனில் இலங்கை என்ற நவீன அரசியல் அடையாளம் உருவானது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான். இலங்கை தீவிலும் சரி, இந்திய தீபகற்பத்திலும் சரி மன்னர்கள் பல்வேறு நிலப்பகுதிகளை ஆண்டார்கள். அவர்களுக்குள் போரிட்டுக்கொண்டார்கள். சோழர்களுக்கு எதிராக இலங்கை அரசர்களும், பாண்டியர்களும் கூட்டணி அமைத்தார்கள். திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போனவர்கள் தமிழும் பேசினார்கள் சிங்களமும் பேசினார்கள். உதாரணமாக அரசியல் செல்வாக்குமிக்க கோவிகாமா பெளத்த குடும்பங்கள் பல இடைக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து குடியேறிய பார்ப்பனர்களின் வம்சாவழிகள் என்று கணநாத் ஒபியசேகரா (Gananath Obeyesekere, பி.1930) என்ற மானுடவியலாளர் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் கூறுகிறார். டெல்லியில் அவருடைய உரையை நேரில் கேட்டேன். அதேபோல வெகுஜன மனோநிலையில் பெளத்தமும், இந்து மதமும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கவில்லை. இந்துக்கள் பெளத்த விஹாரங்களுக்கு செல்வதும், பெளத்தர்கள் கதிர்காமத்தில் கந்தன் ஆலயத்திற்கு வருவதும் இயல்பாகவே இருந்துள்ளது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

இலங்கையில் முதலில் போர்த்துகீசியர்கள் குடியேறினார்கள். பின்னர் அவர்கள் ஆதிக்கத்தை முறியடித்து டச்சுக்காரர்கள் தீவின் பெரும்பகுதியை தங்கள் ஆளுக்கைக்குள் கொண்டுவந்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் பிரிட்டிஷ்காரர்கள் அங்கே கால்பதித்தார்கள். முதலில் சில ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில்தான் அவர்கள் கைப்பற்றிய பகுதிகள் இருந்தன. ஆனால் 1802-ஆம் ஆண்டு இலங்கை பகுதிகள் நேரடியாக பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக மாறின. இங்கிலாந்தில் கிழக்கிந்திய கம்பெனிக்கும், மன்னரின் அரசாங்கத்திற்கும் இருந்த போட்டி, சச்சரவுகள் காரணமாக இலங்கை முழுவதுமாக பிரிட்டிஷ் மன்னராட்சியின் கீழ் 1815-ஆம் ஆண்டு வந்தபோது அது இந்தியாவில் ஆட்சி செய்ய தொடங்கியிருந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு தொடர்பில்லாமல்தான் இருந்தது. இந்த வேற்றுமை இந்தியா முழுமையும் 1858-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் வந்தபோதும் தொடர்ந்து இலங்கை நிர்வாகத்தை இந்திய நிர்வாகத்திலிருந்து பிரித்து வைத்திருந்தது. ஒரு வேளை இப்படி நடக்காமல் இலங்கையும் இந்திய நிர்வாகத்துடன் இணைக்கப் பட்டிருந்தால், அது இந்தியாவின் மற்றொரு மாநிலமாகத்தான் இருந்திருக்கும் என்பதை திட்டவட்டமாகக் கூறலாம். 

ஏனெனில், 1871-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணெக்கெடுப்பு நடந்தபோது இலங்கையின் மக்கள் தொகை இரண்டரை இலட்சம்தான். இன்றைய தமிழ் நாட்டு நிலப்பகுதியின் மக்கள் தொகை அந்த நேரத்தில் ஒன்றரை கோடி. அதிலும் இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் என்பதே அங்கு உருவாகியிருந்த தேயிலை தோட்டங்களாகத்தான் இருந்தன. அதில் வேலை செய்தவர்கள் தமிழகத்திலிருந்து கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட கூலிகள். 

இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவ்வளவு சிறிய மக்கள் தொகையை கொண்டிருந்த இலங்கையை இந்திய கவர்னர் ஜெனரலின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தால் வரலாறே வேறாகத்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்திய தேசிய காங்கிரஸில் இலங்கை தமிழர்களும், சிங்களர்களும் உறுப்பினர்கள் ஆகியிருப்பார்கள். பின்னாளில் ஒரு மாநிலமாகவோ, இரண்டு மாநிலங்களாகவோ இலங்கை தீவும் இந்தியாவுடன் பயணித்திருக்கும். ஆனால் இங்கிலாந்தில் இருந்த அரசியல் முரண்பாடுகள், அதிகாரப் போட்டிகள் காரணமாக இலங்கை தனி நிர்வாகமாக பேணப்பட்டது. அது இலங்கையில் தமிழ், சிங்கள மேட்டுக்குடியினரிடம் தாங்கள் தனி நாடு, தேசிய அரசு என்ற எண்ணத்தை வேரூன்றச் செய்தது. இலங்கை தமிழர்களும் சரி, சிங்களர்களும் சரி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வந்தேறிகளாகத்தான் பார்த்தார்கள். யாழ்ப்பாண பகுதி தலித் சமூகத்தினர்கூட தோட்டத் தொழிலாளர்களை தங்களுக்கும் கீழானவர்களாக பார்த்தார்கள் என்று தெரிகிறது. இவ்வாறாக தீவின் தனித்துவம், தேசியம் வந்தேறிகளான தமிழ் தோட்டத்தொழிலாளர்களை அன்னியர்களாக கட்டமைத்து உருவானது. இந்த தேசியத்தில் இணைவதற்காக இலங்கை முஸ்லீம்களும் தங்களுக்கு மலேசியாவுடனும், கேரளா மற்றும் மத்திய கிழக்கு முஸ்லீம் சமூகங்களுடன் இருந்த நீண்ட கால தொடர்புகளை மறந்து இலங்கை முஸ்லீம்களாக மாறவேண்டியிருந்தது. இப்படியாக, நிலவியல் ரீதியான தீவு என்பது வரலாற்றிலும் தனி தீவாக உருவகிக்கப்பட்டு தனி தேசமாக நிறுவப்பட்டது. ஆனால் அந்த தேசம் அனைத்து மொழி, இன, மத அடையாளங்களும் ஒன்றுபட்டு வாழ வகை கண்டிருந்தால் செழித்தோங்கியிருக்கும். 

வளர்ச்சியும், வன்முறையும்

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேயிலை, ரப்பர், தேங்காய் முதலிய தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியால் பொருளாதாரம் மேம்பட்டபோது, விவசாய நிலங்கள் அதிகரித்தன. மக்கள் தொகையும் 1871-இல் இரண்டரை இலட்சமாக இருந்தது  நூறாண்டுகளில்  1971-ஆம் ஆண்டு ஒன்றரைக்கோடியாக வளர்ந்தது. இதன் பொருள் என்னவென்றால் இலங்கையின் பெரும்பகுதி மக்கள் தொகை நவீன காலத்தில் பெருகியது என்பதுதான். இவர்களுக்கு கூறப்பட்டது, வழங்கப்பட்டது கட்டமைக்கப்பட்ட வரலாற்று அடையாளங்கள். அதில் இலங்கை தீவுக்கே உரிய அடையாளமாக சிங்கள மொழி பேசும் பெளத்த அடையாளம் தெரிவு செய்யப்பட்டது. தமிழர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ இந்த வாய்ப்பு இருக்கவில்லை; ஏனெனில் அவர்கள் அடையாளத்தை கடல் கடந்த தொடர்புகளிலிருந்து முற்றிலும் துண்டித்துக்கொள்வது கடினம். தேயிலைத் தொட்டத்தொழிலாளர்களோ திட்டவட்டமாக வந்தேறிகள். அவர்கள் உழைப்பை சுரண்டித்தான் நவீன இலங்கையே உருவாகியிருந்தாலும் அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து கூட்டிச்செல்லப்பட்ட கொத்தடிமைகள் என்பதால் சுதந்திர இலங்கையில் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. இந்த வந்தேறி அடையாள வன்முறையே இலங்கை தேசியத்தின் அடித்தளமாக அமைந்தது, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று பின்னாளில் வளர்ந்தது. தேயிலைத் தோட்ட தமிழர்களையும் இலங்கை குடிமக்களாக அரவணைத்து தேசித்தை உருவாக்கியிருந்தால் அதன் இனவாத பெரும்பான்மை  நோக்கு கட்டுக்குள் இருந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது. 

வயது வந்தவர்களுக்கெல்லாம் வாக்குரிமை என்ற தேர்தல் சார் மக்களாட்சி அமலுக்கு வ்ந்தபோது பெரும்பான்மையாக இருந்த சிங்கள மொழி பேசுபவர்கள் கையில் அரசியல் அதிகாரம் கிடைத்தது. அதுவரை ஆங்கிலக் கல்வியில் அதிகம் தேர்ச்சி பெற்றதால் அரசு நிர்வாகம் உள்ளிட்ட நவீன அதிகார மையங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்த தமிழர்கள் மீது அரசியல் அதிகாரம் பெற்ற சிங்களர்கள் அசூயை கொண்டார்கள். தமிழர்களின் முக்கியத்துவத்தை குறைக்கவேண்டும் என்பதால் அரசின் அலுவல் மொழி சிங்களம் மட்டுமே என அறிவித்தார்கள். தொடர்ந்து கல்வியிலும் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் பேதங்கள் அதிகரித்தன. இது இலங்கையில் சிங்களர் – தமிழர் மோதல் சூழலை உருவாக்கினாலும், தேசத்தின் பிரச்சினை அது மட்டுமாகவே இல்லை. 

இலங்கையின் பிரதான கட்சிகளில் UNP சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளையும், SLFP சோஷலிஸ மக்கள் நலன் கொள்கைகளையும் பின்பற்றின. இதன் விளைவாக மக்கள் நல நடவடிக்கைகளால் சுகாதாரம், கல்வி ஆகியவை மேம்பட்ட பிறகும், இளைய தலைமுறையின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் வேலை வாய்ப்புகளும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உருவாகவில்லை. இது சமூக ஏற்றத்தாழ்விற்கு எதிராக அவர்களை கிளர்ந்தெழ வைத்தது. ஜனதா  விமுக்தி பெரமுனா (JVP) என்ற இடதுசாரி அமைப்பு 1971-ஆம் ஆண்டும், 1987-ஆம் ஆண்டும் அரசுக்கெதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டது.  தமிழர்களிடையே உருவான விடுதலை இயக்கங்களிலும் இந்த வர்க்க நோக்கு பிரதிபலித்தது. சிங்களர்களை இந்த வர்க்க நோக்கிலிருந்து திசை திருப்ப பெரும்பான்மைவாதம் இலங்கை அரசியல்வாதிகளுக்கு கைகொடுத்தது. 

பெரும்பான்மைவாதத்தின் விளைவுகள்

சிறுபான்மை மக்களை விரோதிகளாக கட்டமைப்பது, வந்தேறிகள் என்று ஒரு மக்கள் தொகுதியை குறித்து குடியுரிமையை பறிப்பது ஆகிய செயல்கள் மூலம் அதிருப்தி அடைந்துள்ள இளைஞர்களை திசைதிருப்புவது சாத்தியம். அதைத்தொடர்ந்து பெரும்பான்மைவாத அரசியல் பொறுப்பற்ற சர்வாதிகாரத்தை, பாசிசத்தை உருவாக்கிவிடும். பெரும்பான்மைவாத நலனுக்காக அனைத்து விமர்சனங்களையும் தணிக்கை செய்வார்கள்; ஊடகங்கள் ஊதுகுழல்களாக மாறும். மாற மறுக்கும் ஊடகங்கள் ஒடுக்கப்படும். அரசியல்வாதிகள் ஒரு சுய நலக் கும்பலாக வடிவெடுப்பார்கள். இலங்கையில் அரசை விமர்சித்த லசந்தா விக்ரமதுங்க உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 

விவசாய பின்னணியிலிருந்து வளர்ந்து, சோஷலிஸவாதியாகவும், மனித உரிமை செயல்பாட்டாளராகவும் அறியப்பட்ட மகிந்த ராஜபக்சேவும், அவர் குடும்பமும் ஊழல் பெருச்சாளிகளாகவும், எதேச்சதிகாரிகளாகவும் பெரும்பான்மைவாத அரசியலின் மூலம் உருவெடுத்தார்கள். உள் நாட்டுப் போரை காரணம் காட்டி ராணுவச் செலவை பன்மடங்கு அதிகரித்தார்கள். ஏற்கனவே உள் நாட்டுப் போரால் சிதைவுற்றிருந்த பொருளாதாரம், ராணுவச் செலவு, கடன் சுமை, ஊழல், நிர்வாகக் குளறுபடிகள் எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. இப்போது நாடே திவாலான நிலையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ளது. 

இலங்கையின் தேசிய தற்கொலை 

இலங்கையிலிருந்து அறுபதிகளிலேயே புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வந்த கவிஞர் பிரமிள் இலங்கை உள் நாட்டுப்போர் துவங்கிய போது “ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை” என்று ஒரு நூலை எழுதினார். அவர் கூற்று நாற்பதாண்டுகள் கழித்து மெய்யாகிவிட்டது. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய தீவு. அளவான மக்கள் தொகை; அதிக பட்சம் ஒன்றரை கோடி பேர்  (உள் நாட்டுப் போர் தொடங்கும் சமயம்). இந்து மகா சமுத்திரத்தின் முக்கிய துறைமுகமான ஒரு தலை நகரம். கல்வியில் சிறந்த மக்கள். சிங்களர், தமிழர்கள், மலையக தோட்டத் தமிழர்கள், முஸ்லீம்கள் என நான்கு மக்கள் பிரிவினரும் நல்லதொரு அதிகாரப் பகிர்வுடன், புரிதலுடன் தேசத்தை உருவாக்க முனைந்திருந்தால் அருமையானதொரு வாழ்வு அனைவருக்கும் அமைந்திருக்கும். 

தோட்டத் தொழிலாளர்கள் வந்தேறிகள், அவர்களுக்கு குடியுரிமை தரமாட்டோம் என்று தொடங்கினார்கள். பின்னர் தமிழர் ஆதிக்கம் என்று சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றார்கள். சிங்களர்களுக்கு முன்னுரிமை என்றார்கள். தமிழர் மீதான் வெறுப்பை கட்டமைத்தார்கள். இந்த செயல்களின் மூலம் தமிழர்களிடையேயும் வெறுப்பை விதைத்தார்கள். தமிழ் ஈழ கோரிக்கை உருவாக வழி வகுத்தார்கள். அதை காரணமாக வைத்து குடிமக்களின் உரிமைகளை குறைத்தார்கள்; பொறுப்பற்ற ஆட்சியாளர்களை, எதேச்சதிகாரிகளை தோற்றுவித்தார்கள். உலகமே பதறிப்போகும்படியான வன்முறை நிகழ்வுகள் அரங்கேற வகை செய்தார்கள். குரங்கு கை பூமாலையானது தேசம். 

என்னதான் படிப்பினை? பூமியில் எல்லோருமே வந்தேறிகள்தான். யாரும் மரம் செடி போல நிலத்தில் முளைப்பதில்லை. மரம் செடிகளின் விதைகளே எங்கிருந்தோ வந்த பறவைகள் இட்ட எச்சமாக இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மகத்தான தரிசனமே மானுட யதார்த்தம். அதை விடுத்து நாங்கள் பூர்வகுடிகள், இவர்கள் வந்தேறிகள் என்று சமூகத்தை பிளவுபடுத்துவதும், பெரும்பான்மை அடையாளத்தை அரசியலின் அடிப்படையாக கட்டமைத்து சிறுபான்மையினரை ஒடுக்குவதும் எந்த தேசத்தையும் அழிவை நோக்கியே இட்டுச் செல்லும். 

இஸ்லாமியர்களை அன்னியர்களாக கட்டமைக்கும். இந்தி மொழியை ஒற்றை அலுவல் மொழியாக்க துடிக்கும் பாரதீய ஜனதா கட்சியும், தெலுங்கு மொழி பேசுபவர்களின் வம்சாவழியினரை வடுக வந்தேறிகள் என்று சொல்லி, தூய தமிழ் அடையாள மீட்புவாதம் பேசும் நாம் தமிழர் கட்சியும் இந்தியாவையும், தமிழகத்தையும் அழிவுப் பாதைக்கு மட்டுமே இட்டுச் செல்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள இலங்கை மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது எனலாம். 

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.