இலங்கை புதிய சட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Published On:

| By Balaji

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீனவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 25) அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இன்று காலை இந்திய கடல் எல்லையில் இரண்டு விசைப்படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபுரத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவர இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதற்காகச் சட்ட மசோதா நேற்று (24.01.2018) இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தின்படி இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். அதன்படி இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்படும் இந்திய மீனவர்களுக்கு சிறைத்தண்டனையும், அபராதத்தையும் அதிகப்படியாக உயர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக இரு நாடுகளின் மந்திரிகள் ஏற்கெனவே இரண்டு முறை சந்தித்து பேசியுள்ள போதும், இந்தப் புதிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்தப் புதிய சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தாமல் இருக்கப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்கள் 108 பேரையும், 165 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share