இலங்கை அரசன் மாகாதிஸன், பாண்டிய அரசன் பெருவழுதியும் ஒருவரே! – பு.ஜார்ஜ்,

Published On:

| By Balaji

கி,மு, 273 முதல் 236 வரை பரந்து விரிந்திருந்த அன்றைய இந்தியாவின் புகழ்மிகு பேரரசராக விளங்கியவர் அசோகர். இவரது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில், இலங்கையில் அரசாட்சி செய்தவராக சிங்கள அரசர் மகாதிஸன் என்பவர் சிங்கள வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். மகாவம்சம் இவரது ஆட்சிக்காலத்தை கி.மு. 247 முதல் 207 வரை என்று தெரிவிக்கிறது.

மகாதிஸனைக் குறிப்பிடும் இலங்கையின் பிராமி கல்வெட்டுகள் கி.மு. 3ம் நூற்றாண்டுக்குரியனவாக அறியப்பட்டுள்ளன. தர்மவிஜயம் எனப்படும் அறவெற்றிக்குட்பட்ட தமது பகுதியாக சேர, சோழ, பாண்டிய, சத்தியபுத்திர (அதியமான்கள்) ஆட்சிப் பகுதிகளோடு தம்மபண்ணி எனப்படும் இலங்கையும் இருந்ததென அசோகர் தமது பாறைக் கல்வெட்டுகளில் பதிவுசெய்துள்ளார். அசோகரது மகனான மகேந்திரரை இலங்கைக்கு அழைத்துவந்து அங்கு பௌத்தம் செழிக்கச்செய்தவராக மகாதிஸனை மகாவசம் முதலான இலங்கை வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

ADVERTISEMENT

‘ஸமுத’என்று, இவ்வரலாற்று நூல்களில் மகாதிஸன் குறிப்பிடப்பட்டுள்ளார். இலங்கையின் தொடக்ககால பிராமி கல்வெட்டுகளிலும் ‘ஸமுத’என்று குறிக்கப்பட்டுள்ளார். ‘ஸமுத’என்பது சமுத்திரன் என்று பொருள்படும். பௌத்தப் பேரறிவாளன் எனும் பொருளில் ‘மகாபஞ்ஞா’என்று இவரை தீபவம்சம் குறிப்பிடுகிறது.

அசோகருக்குத் துணையாக நின்று, தென்னாட்டில் பௌத்த தர்மத்தை வளர்த்தெடுத்ததோடு ஆசிய நாடுகளில் பௌத்தத்தைப் பரப்பினார் மகாதிஸன். இவர் பின்பற்றியது தேரவாத பௌத்தமாகும். தேவனாம்பிரியன் என்று அசோகர் அழைக்கப்பட்டதுபோலவே, மகாதிஸனும் தேவனாம்பியதிஸன் என்று அழைக்கப்பட்டார். இவரது தந்தையரான முத்தசிவன் (கி.மு. 307-247) என்பவரை இலங்கை வரலாற்று நூல்களும், இலங்கை பிராமி கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. இலங்கையில் பௌத்தத்தால் பெண்களும் ஈர்க்கப்பட்டார்கள்.

ADVERTISEMENT

ஆனால், மகேந்திரனால் பெண்களுக்கு தீட்சை வழங்கமுடியாத நிலை இருந்தது. பெண் துறவியால்தான் பெண்களுக்குத் தீட்சை வழங்கவேண்டும் என்பது பௌத்த சங்க விதியாக இருந்தது. எனவே, மகேந்திரரின் ஆலோசனைப்படி, ஸங்கமிதா (சங்கமித்திரை) எனும் அவரது சகோதரியை இலங்கைக்கு அழைத்துவரச் செய்தார் மகாதிஸன். ஸங்கமிதா தேரியை அசோகரிடமிருந்து அழைத்துவரச் சென்றவர் மகாதிஸனின் மருமகனும், தளபதியுமான மகாஅரித்த ஆவார். ஸங்கமிதாவை அழைத்துவந்தவுடன் தாமும் துறவேற்கப்போவதாக தம் மாமனிடம் அரித்த ஒப்பந்தம் செய்துகொண்டார். ஸங்கமிதாவை இலங்கையில் கொண்டு சேர்த்துவிட்டு ஒப்பந்தப்படி பௌத்தத் துறவியானார் அரித்த.

சங்ககாலத் தமிழ்நாட்டு வரலாற்றில், ‘வழுதி’என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்ததாகத் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, பன்னாடு கடந்த மாறன் வழுதி, கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெரு வழுதி, குறு வழுதி, நல் வழுதி என பல்வேறு அடைகளுடன் அழைக்கப்பட்ட வழுதி ஒருவரே எனலாம். இவருக்குக் கடலன் என்ற பெயரும் இருந்திருக்கிறது. ‘மாவண் கடலன்’என அகநானூறு (81) சுட்டும் அரசர் இவராகலாம். கடலுள் சண்டையிட்டவன் என்பதால் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்று இவர் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் ‘தம்மம்’என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இதிலுள்ள ‘த’அசோகர் பிராமி எழுத்து வடிவமான ‘த’எனும் வர்க்க எழுத்தாகும். ‘குவன்’எனும் சொல்லும் இவற்றில் உள்ளது. குவன் என்பது புத்தரைக் குறிப்பதாகும். மேற்கூறிய கல்வெட்டுகளில் ஒன்று வழுதியை ‘பண்ணன் கடலன் வழுதி’ என்று குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களும் பண்ணன் என்பவரைக் குறிக்கின்றன. பண்ணன் என்பது பண்ணையார் என்றே இதுவரை கொள்ளப்பட்டிருக்கிறது. ‘பண்ணன்’என்பது பௌத்த அறிவாளன் எனப் பொருள்படும் ‘பஞ்ஞா’ என்ற சொல்லின் தமிழ்ப்படுத்தலாகும். இலங்கையின் சிங்கள அரசன் மகாதிஸன் ‘மகாபஞ்ஞா’என்று மகாவம்சத்திலும், இலங்கை பிராமி கல்வெட்டுகளிலும் குறிக்கப்பட்டுள்ளார். பௌத்தப் பேரறிவாளன் என்பது இதற்குப் பொருள். அரிட்டர் பெயரில் அமைந்த அரிட்டாபட்டி எனும் ஊர் தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டு பிராமி கல்வெட்டுகள் அரிட்டர் பெயரைப் பதிந்துவைத்துள்ளன.

அவற்றிலொன்று அரிட்டரை ஈழத்துக்குரியவராக அடையாளப்படுத்துகிறது. தமிழகத்து பிராமி கல்வெட்டுகளும், இலங்கை பிராமி கல்வெட்டுகளும் சமகாலத்தன. இவ்விரு நாட்டிலுள்ள கல்வெட்டுகளும் அகர எழுத்து வடிவமானது ஒரே மாதிரியாக உள்ளது. இவ்வடிவம் ஐராவதம் மகாதேவனால் தென்னகத்து பிராமி வடிவமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இது, மௌரியர் பிராமி வடிவத்திலிருந்து வேறுபட்டதாகும்.

‘கபதி கடலன்’ என்ற பெயரில், இலங்கையில் சங்ககால நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிராமி கல்வெட்டுகளில் கபதி/ககபதி என வரும் இடங்கள், கிருகபதி எனும் பௌத்த இல்லறத்தாரைக் குறிப்பனவாகும். உபாசகர் எனப்படும் இந்த பௌத்த இல்லறத்தார் தமிழில் ‘காவிதி’ என அழைக்கப்படுகின்றார். சித்தன்னவாசல் கல்வெட்டு குறிப்பிடும் ‘காவுட் இ’ எனும் சொல்லாட்சியும் காவிதியைக் குறிப்பதாகும். சங்க இலக்கிய ஆசிரியர்கள் பலர் காவிதி எனும் இப் பெயரைக் கொண்டுள்ளனர். காவிதி என்பதன் தமிழ்ப்படுத்தம் ‘குடும்பிகன்’என்பதாகும். எனவே ‘கபதி கடலன்’ என்பது பௌத்த இல்லறத்தான் (அ) குடும்பிகன் கடலன் எனும் பொருள் தருவதாகும். சமுத்திரன் எனும் பொருள்பட ‘ஸமுத’என அழைக்கப்படும் இலங்கை அரசன் மகாதிஸ (தேவனாம்பியச) என்பது பாண்டிய அரசன் கடலன் வழுதியைக் குறிப்பதாகும். அவரை, கபதிகடலன் என நாணயம் குறிப்பிடுவதால் ’கடலன்’ பௌத்த இல்லறத்தான் என்பது பெறப்படுகிறது.

குடும்பிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்ததால் முதுகுடுமிப்பெருவழுதி என்றும் இந்த கடலன் அழைக்கப்பட்டார்.மேலும், மகாதிஸனுடைய இலங்கை பிராமி கல்வெட்டுகளில் அரச முத்திரையாக ஸ்வஸ்திகமும், மீன் சின்னமும் இடம்பெற்றுள்ளது. மகாதிஸனை பாண்டியன் என்பதற்கு இந்த மீன் சின்னமும், பௌத்தன் என்பதற்கு ஸ்வஸ்திகமும் சான்றுகளாகத் திகழ்கின்றன. முத்த சிவனின் மகனாக, இலங்கை வரலாற்று நூல்களிலும், கல்வெட்டுகளிலும் மகாதிஸன் குறிக்கப்படுகிறார். பெருவழுதியின் நாணயம் ஒன்றில் ‘பெருவழுதி’என்றும், பெருவழுதிஸ’என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. ஐராவதம் மகாதேவன் இதிலுள்ள மூன்று கையுடைய சின்னத்தை ‘ஸ’என்று படித்துள்ளார். ‘மகாதிஸ்’என்பதுதான் இதில் ‘பெருவழுதிஸ’என்று பௌத்த பாலி அடையாளத்துடன் இடம்பெற்றிருக்கிறது. பெருவழுதியின் தந்தையாகிய முத்தசிவன் (முத்துசிவன்) தலையாலங்காணத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவார்.

’முட்டசிவன்’ என, சிங்கள வரலாற்று நூல்கள் குறிப்பிடும் இவர், பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அறியப்பட்டிருக்கும் தமிழரசர் ஆவார். மதுரை மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் நெடுஞ்செழியன் இவர் ஆவார். இந்த மாங்குளக் கல்வெட்டின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு என்கிறார் ஐராவதம் மகாதேவன். நெடுஞ்செழியனின் நாணயங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.மு. 3ம் நூற்றாண்டுக்குரியனவாக அடையாளம் காட்டுகிறார் இரா.கிருஷ்ணமூர்த்தி. முத்தசிவனின் காலமும் (கி.மு. 307–247) அவரது மகனான மகாதிஸனின் காலமும் (கி.மு. 247–207) ஏறத்தாழ கி.மு. 3ம் நுற்றாண்டு முழுவதும் என்று இலங்கை வரலாற்றுப் பதிவுகள் கூறுவன, இரா. கிருஷ்ணமூர்த்தியின் மேற்கண்ட காலக்கணிப்போடு பொருந்தி வருகின்றன.

பாண்டியன் நெடுஞ்செழியனின் மகன்தான் பெருவழுதி. நெடுஞ்செழியனும் பெருவழுதியும் சேர்ந்து சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள். அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய முக்கியமான சங்க இலக்கியங்களைத் தொகுப்பித்தவர்கள் இந்த நெடுஞ்செழியனும், பெருவழுதியும் என்பது கவனிக்கத்தக்கது. அசோகரின் மகன் மகேந்திரன், ‘மகாதேரர்’ என சிங்கள வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகிறார். இவர்தான் அகத்தியர். அகத்தியரோடு தொடர்புடைய தமிழகத்துப் பொதிகைமலை மகேந்திரகிரி என்றும், அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுவது இதற்குச் சான்று.

முத்தசிவனாகிய நெடுஞ்செழியனே சிவனாகவும், மகாதிஸனாகிய பெருவழுதியே முருகனாகவும் அகத்தியரோடு சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்தார்கள். சிவனுக்கும், முருகனுக்கும் பௌத்த அறத்தை மகேந்திரர் அளித்தார். அந்த அறமே அகத்தியம். மகேந்திரரை முதல்முதலாக இலங்கையில் மகாதிஸன் வரவேற்ற இடம் தென்மதுரை ஆகும். இது, இலங்கையின் தென்கோடிப் பகுதியில் இன்றைக்குமுள்ள மதிரா மாவட்டமாகும். தலைச்சங்கம் இங்குதான் கி.மு. 3ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருந்தது.

கடல் சீற்றத்தால் அன்று இப்பகுதி சேதமடையவே தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள கொற்கைக்குத் தலைநகரை மாற்றி இடைச் சங்கத்தை அங்கு நிறுவினார்கள். கொற்கையின் அரசனாக மகாதிஸனை இலங்கை கல்வெட்டு குறிக்கிறது. கொற்கையை ஆழிப்பேரலை சேதப்படுத்தவே கொற்கைக்கு வடக்கேயுள்ள மதுரைக்கு தலைநகரை மாற்றி அங்கே கடைச்சங்கத்தை நிறுவினார்கள். நெடுஞ்செழியன் தன் இளம்வயதிலேயே தென்னகம் முழுவதையும் (சேர, சோழ மற்றும் அதியமான் முதலிய குறுநில மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள்) தம் ஆட்சியின்கீழ் கொண்டுவந்திருந்தார். இலங்கையின் தென்கோடிப் பகுதியான குமரியாறு தொடங்கி தமிழகத்துக்கும் வடக்கேயுள்ள வேங்கடம்வரை இவ்வாட்சி பரவியிருந்தது. இந்த ஆட்சிப்பரப்பு முழுவதும் பௌத்த அறம் கடைப்பிடிக்கப்பட்டது. தென்னிந்திய அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் காணப்படும் பிராமி எழுத்துகள் இதற்குச் சான்று பகர்கின்றன. மேலும், மௌரிய நாணயங்கள் பெருமளவில் தென்னகப் பரப்பெங்கும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்ககால நாணயங்களில் புத்தரது அடையாளமான யானை இடம்பெற்றுள்ளது.

(புது விசை பிப்ரவரி 2016 இதழில், பு.ஜார்ஜ், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, சென்னை கிறித்தவக் கல்லூரி எழுதியுள்ள சங்ககால தமிழக வரலாற்றுக்குப் புதிய வெளிச்சம் கட்டுரையின் முக்கியப் பெரும்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது)

நன்றி: புதுவிசை, பிப்ரவரி 2016

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share