மதுரை மாவட்டம் உச்சம்பட்டி அகதிகள் முகாமில் சமீபத்தில் இலங்கை அகதி ரவீந்திரன் வருவாய்த்துறை அதிகாரியின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி முகாமில் சுபேந்திரன் என்ற அகதி, சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லி பாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு அவரது இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போடும்படி உளவுத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் சுபேந்திரனையும், அவரது துணைவியாரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கேள்விகேட்ட முகாமின் தலைவர் கண்ணனையும் காவலர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கி ஜட்டியோடு உட்கார வைத்துள்ளனர். முகாமைச் சேர்ந்த பலர் மீதும் காவல் துறையினர் பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அகதிகள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளாவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
