இலங்கை அகதிகளுக்குச் சூரிய மின்சார வசதிகள் கொண்ட ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் ஜூலை 9ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், இலங்கை அகதிகளின் மறுவாழ்விற்காக வீடுகள் கட்டித் தரத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்தத் திட்டம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து 20,000 வீடுகள் அகதிகளுக்குக் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.
மியான்மர், வியட்நாம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வந்திருந்தாலும், இலங்கை அகதிகளின் எண்ணிக்கை தான் அதிகளவில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 65,000 இலங்கை அகதிகள் உள்ளனர்.
முதல்கட்டமாக 2,000 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. இதில் 1000 வீடுகள் சூரிய மின்சார வசதி கொண்ட வீடுகளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
