“இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை தரப்பட வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.O திரைப்படம் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே சார்பில் அவரிடம் நேர்காணல் எடுக்கப்பட்டது. அதில் அரசியல், சினிமா, தனி வாழ்க்கை, முக்கிய பிரச்சினைகள் குறித்து ரஜினிகாந்த் மனம் திறந்திருந்தார். பேட்டியின் சில பகுதிகளை நேற்று முன்தினம் 7 மணி பதிப்பில் வெளியிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சி….
**மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம்?**
இந்தியா மதச்சார்பின்மை நாடாக அறியப்படுகிறது, இதுதான் இந்தியாவின் அழகும். எனவே மதச்சார்பின்மை தக்கவைக்கப்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு சிறந்த குடிமகனும் மதச்சார்பின்மையை விரும்புவர்.
**காவிரிப் பிரச்சினையை தீர்க்க என்ன வழி?**
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நதிகள் இணைப்புதான் ஒரே தீர்வு. இது ஒரு மிகப்பெரிய பணி என்பது எனக்குத் தெரியும். பல மனங்கள் இதில் இணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
**இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. இலங்கை தமிழர்களுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?**
முதலில் இந்தியாவில் இருக்கக் கூடிய இலங்கை தமிழ் அகதிகளை, இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரப்பட வேண்டும்.
**இந்தியா செய்தே ஆக வேண்டுமா?**
ஆம், இந்தியா இதைச் செய்தே ஆக வேண்டும். தமிழக அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாகச் சிறையில் வாழ்வது போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றிப் பேச இங்கு யாரும் இல்லை.
**இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?**
இந்தப் பிரச்சினையில் இந்தியா எப்போது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அது இலங்கையின் பிரச்சினைதானே என்று விட்டுவிடக் கூடாது.
**மீடூ பிரச்சினையில் உங்களுடைய கருத்து?**
நிச்சயமாக… இது பெண்களுக்கு நல்ல இயக்கம். ஆனால், இதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
**தமிழகத்தை முன்னேற்ற என்னென்ன உத்திகளை வைத்திருக்கிறீர்கள்?**
முதலில் வறுமை ஒழிப்புக்கே முன்னுரிமை, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மாநிலத்தின் மேம்பாட்டுக்காகப் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். விவசாயிகள், இளைஞர்கள் என அனைவருமே இங்கு துன்பப்படுகின்றனர். அதைத் தீர்க்க வேண்டும்.
