இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தல்!

Published On:

| By Balaji

மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு, இலங்கை அரசுடன் ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அந்தோணி,ரூபின்சன், வில்பர்ட், ரமேஷ், ஆரோக்கியம், பாக்கியம், வினோத் உள்பட 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், இலங்கை கல்பட்டி நீதிமன்றம், மீனவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதமும் ( இந்திய மதிப்பில் ரூ.26 லட்சம்) , 3 மாதம் சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில் எட்டு மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், புதிய கடல் தொழில் சட்டத்தின் படி 8 மீனவர்களுக்கும் தலா ரூ. 60 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன் மீனவர்கள் கடலுக்குள் செல்வதே பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டு இன்று (அக்டோபர் 18) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததன் விளைவாகவே இத்தொடர்தாக்குதல்கள் நடக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்..

ADVERTISEMENT

மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை ரத்து செய்வதோடு, எந்தவித நிபந்தனையுமின்றி அவர்களை விடுவிக்க வேண்டுமெனவும்; அவர்களது படகுகள் மற்றும் உடமைகளையும் பத்திரமாக மீட்டெடுத்து தமிழகம் அழைத்து வருவதற்கும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டுமெனவும்; தமிழக அரசும் இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 10 நாட்கள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி 500க்கும்மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுகளைச் சுற்றி வளைத்து மீனவர்களைத் தாக்கி காயப்படுத்தியதுடன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கடலில் வீசி எறிந்துள்ளதாக வந்துள்ள செய்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

எனவே தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு, இலங்கை அரசுடன் ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share