இலங்கையில் காற்றழுத்தத் தாழ்வு: டெல்டாவில் மழை!

Published On:

| By Balaji

இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெருமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

பாக் ஜலசந்தியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை கடல்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தற்போது காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனால் தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, இலங்கை பகுதிகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மேகங்கள் விரவிக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இன்னும் 24 மணி நேரத்துக்குப் புயல் உருவாவதற்கான சூழல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்று (டிசம்பர் 22) சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “இலங்கை மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலை இருப்பதால், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் (டிசம்பர் 23) அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். டெல்டா மாவட்டம் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெருமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினார். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில், மீனவர்கள் நாளை மதியம் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவித்தார் புவியரசன்.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 4 செ.மீ., பாம்பன் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்றும், படிப்படியாக இந்த மழையின் அளவு குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share