திமுகவிற்கு உண்மையான வரலாறு குறித்து பாஜக பாடம் புகட்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமர்சித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி உதவியதாகவும், அதற்கு திமுக துணை போனதாகவும் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், “இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது கலைஞர் எப்படி வேதனைப்பட்டார் என்பதை அவருடன் இருந்தவர்களுக்கும், அவரை நன்கு அறிந்தவர்களுக்கும் தெரியும்” என பதிலளித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தமிழிசை செளந்திரராஜன் இன்று (செப்டம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில், “பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த திமுக வரலாறு குறித்து பேசலாமா” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
“1991இல் ராஜிவ் காந்தியின் மறைவுக்கு பின் அன்றைய மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாயிடம் நான் என்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததே இல்லை, உண்மையான விடுதலைப் புலி ஆதரவாளர் நானில்லை, ஜெயலலிதாதான் என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் தன் அரசை கலைக்கக் கூடாது என்று மன்றாடி கேட்டு கொண்டது உண்மையா, இல்லையா?. இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள். பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப் போய்விட்டது என்றும் அன்றைய முதல்வர் கலைஞர் கூறியது உண்மையா இல்லையா?. தமிழீழத் தனிநாடு இனிச் சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் சொன்னது உண்மையா, இல்லையா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும், “ஸ்டாலினுக்கு விடுதலை புலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டது உண்மையா இல்லையா? அதனடிப்படையில் தான் இன்றும் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருப்பது உண்மையா, இல்லையா? தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் ஸ்டாலின், அவர்கள் அனைவரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?. எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்க தான் என்று ராஜபக்சே கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது” என்றவர், கச்சத் தீவை மீட்க போராடியது பாஜக தான் என்றும் இலங்கை பிரச்சனைக்கு சரியான தீர்வு கூறியவர் வாஜ்பாய் தான் என்றும் விளக்கமளித்துள்ளார்.
“உங்களின் தூண்டுதலால், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கைத் தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்குப் பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பாஜக புகட்டும்”என தமிழிசை தெரிவித்துள்ளார்.
