இன்று கடைசி ஒரு நாள் போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

விளையாட்டு

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 27) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற ஆவல் கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.  
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று ஒருநாள் போட்டி தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் மூன்று ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (ஜூலை 27) இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஹாட்ரிக் பெற்றியை பெறுமா என்ற ஆவல் கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்யும் வகையில் இந்திய வீரர்கள் அதிக உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடாத வீரர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் இதுவரை 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக ஜடேஜாவும் ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்தது. தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.
இந்த நிலையில் நிக்கோலஸ் பூரண் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அடையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி இரண்டு ஆட்டத்திலும் கடுமையான போராட்டத்துக்குப் பிறகே தோற்றது. இதனால் அந்த அணி வீரர்கள் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.
இரு அணிகளும் இன்று மோதுவது 139ஆவது ஆட்டமாகும். இதுவரை நடந்த 138 ஆட்டத்தில் இந்தியா 69இல் வெஸ்ட் இண்டீஸ் 63இல் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு ஆட்டங்கள் டை ஆனது. நான்கு போட்டிகளில் முடிவு இல்லை.

– ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.