இந்தியாவின் Operation Sindoor ராணுவ நடவடிக்கைக்கு பதிலாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பாகிஸ்தான் எஃப் 16 ரக போர் விமானம் ஆகியவற்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இடைவிடாத தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இன்று ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தை குறிவைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் இந்திய ராணுவம், பாகிஸ்தானின் டிரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தத் தாக்குதலை முறியடித்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் அதி உச்ச பாதுகாப்பு நிலையில் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தானின் ஏவுகணை ஒன்று இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மரிலும் பாகிஸ்தானின் டிரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. பொக்ரான் பகுதி மீது ஏவப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து அழித்தது இந்திய ராணுவம். பஞ்சாப் மாநிலத்திலும் பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்ததை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த பதிலடி தாக்குதல்களில் பாகிஸ்தானின் எஃப்.16 ரக போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மொத்தம் 8 ஏவுகணைகளை வீசியதாகவும் இவை அனைத்தும் இடைமறித்து நடுவழியிலேயே அழிக்கப்பட்டுவிட்டதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐபிஎல் போட்டி ரத்து
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த ஐபிஎல் போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டது; மைதானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
டெல்லி, மேற்கு வங்க அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து
பாகிஸ்தானுடனான எல்லை பகுதிகளில் போர் பதற்றம் நிலவுவதால் டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆலோசனை
டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 8 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத்தின் கட்ச், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர், பாகிஸ்தானுக்கு பதிலடி தர தயார் நிலையில் உள்ளனர்.