இந்தியா – பாகிஸ்தான் மேட்சுக்கு முன் கோலி கடத்தப்பட்டால்?

Published On:

| By Balaji

பரபரப்பான இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறும் 36 மணி நேரத்துக்கு முன்பாக இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் கடத்தப்படுகிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை த்ரில்லிங்காக சொல்லியிருக்கும் பாலிவுட் படம்தான் ‘டிஷ்யூம்’. வருண் தவான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இந்தப் படத்தை ரோகித் தவான் இயக்கியுள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே ‘படத்தில் குறிப்பிடப்படுபவர் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான்’ என்று கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்துக்கான டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பேசிய வருண் தவான், “நாங்கள் இருவரும் ஒரே கால்பந்து அணியின் (FC Goa) ஆதரவாளர்கள் என்ற வகையில் சமீபத்தில் விராட் கோலியை சந்தித்தேன். அவரிடம் நான் படத்தைப் பற்றி கூறினேன். அவருக்கு இந்தப் படம் குறித்து முன்பே தெரிந்திருக்கிறது. அவர் இதை கூலாக எடுத்துக் கொண்டார்” என்றார்.

ADVERTISEMENT

படத்தின் இயக்குனர் ரோகித் தவான் பேசும்போது, “படத்தில் வரும் வீரர், இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலியைப் போல் ஒரு தடகள வீரர். கோலியைப் போல் ஒரு மேட்ச் வின்னர். ஆனால், அவர் பெயர் விராஜ் ஷர்மாவே தவிர, விராட் அல்ல” என்று டெம்பர் ஏற்றியிருக்கிறார். அதேநேரம் நாம் வாழும் முதலாளித்துவ உலகில் அனைத்து குற்றங்களுக்கும் பணமே காரணம் என்றும் படத்தில் பாகிஸ்தானை தவறாகச் சித்தரிக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share