இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: சீனா ரியாக்‌ஷன்!

Published On:

| By Balaji

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஒபாமாவை சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்புக்குப்பிறகு அணு எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளது. மேலும், இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மோடியின் இந்தப் பயணத்தையும், அமெரிக்காவுடனான இந்திய உறவையும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை வர்ணித்துள்ளது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 4 முறை அமெரிக்கா சென்றுவிட்டார். 7 முறை ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். மேலும், எம்.டி.ஆர்.சி. எனும் ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு குழுமத்தில் இந்தியா இணையவுள்ளது. இதன்மூலம், நீண்டதூரம் பயணித்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள், யு.ஏ.வி. தொழில்நுட்பங்கள் போன்றவற்றை இந்தியா பெறமுடியும். யு.ஏ.வி. என்பது ஆளில்லாமல், ரிமோட் கன்ட்ரோல்மூலமாக இயக்கப்படும் விமானமாகும். இந்நிலையில், அமெரிக்காவும் இந்தியாவும் அடைந்துள்ள இந்த நெருக்கமான உறவுகுறித்து சீன அரசின் பத்திரிகை எழுதியுள்ளது. அதில், ஒரு பக்கத்தையோ, ஒற்றைக் கூடாரத்தையோ இந்தியா தேர்ந்தெடுப்பது அதன் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. பலவயப்பட்ட பிணைப்புகள், சர்வதேச உறவுகள் மூலமாகத்தான் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். பல்வேறுவகையில் சீனாவுக்கு இணையானதாக இருக்கும் இந்தியாவின் பெருங்கனவுகள் சீனாவை நிராகரித்துவிட்டோ, உள்ளடக்கி வைத்துவிட்டோ சாதிக்க முடியாது. இருதரப்பு நம்பிக்கையைப் பெறுவது, ஒத்துழைப்பையும், ஆற்றலை வெளிப்படுத்துவதுமே இந்தியாவின் நலனுக்கு உகந்தது. இந்தியாவுக்கு சீனா ஒரு போட்டியாளர் என்பதைவிட, உதவியாளராக இருக்கமுடியும். அதுதான் சீனாவைப்பற்றிய இந்தியாவின் அடிப்படைப் புரிதலை கட்டமைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share