இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆஸ்திரேலியா!

Published On:

| By Balaji

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரென்ஷா மற்றும் வார்னர் நிதானமாக ஆடினாலும் ரென்ஷா அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரிகளை அடித்தார். அவர் ஒருபக்கம் அணியின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கும்போது வார்னர் 2 பவுண்டரிகளை மட்டும் அடித்து 19 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், ரென்ஷாவோடு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், ரென்ஷா 69 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மார்ஷும் 2 ரன்களில் அஸ்வின் வீசிய பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.

ஸ்மித் 34 ரன்னுடனும் ஹேண்ட்ஸ்காம்ப் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 5வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக விளையாடி 104 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

ADVERTISEMENT

தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 80 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேக்ஸ்வெல் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ஸ்மித் இந்த தொடரில் தனது 2வது சதத்தை அடித்தார். பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்காத ஆடுகளத்தில் இருவரும் சிரமமின்றி ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share