எந்த ஒரு சினிமா கலைஞனுக்கும் இந்திய அளவில் கவனம் பெறுவது கனவாகவே இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மற்ற திரையுலகங்களில் தங்களது முத்திரையைப் பதிக்கும் முயற்சியில் பலர் ஈடுபடுவார்கள். சிலருக்கு அந்த வாய்ப்பு தானாக அமையும். சமீபத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக காஜல் அகர்வால் இந்திய அளவில் பலரின் எதிர்ப்பையும், சிலரின் ஆதரவையும் பெற்றதுபோல அந்த வாய்ப்புகள் அமையும். ஆனால், அனைத்துத் தரப்பிலும் ஆதரவு மட்டுமே கிடைக்கும்வகையில் விக்னேஷ் சிவனின் எதிர்பாராத முயற்சி அமைந்துவிட்டது. அதிலும் ஒரே ஒரு ட்வீட்டில் விக்னேஷ் சிவன் அந்த இடத்தை அடைந்துவிட்டது சிறப்பு.

பாகுபலி திரைப்படத்தில் ஐந்து தவறுகள் என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் பதிவு செய்த ட்வீட்டுக்குக் கிடைத்த வரவேற்புதான் இந்திய அளவு ட்ரெண்டிங். அந்த ஐந்து தவறுகளாக விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருப்பவை.
**வெறும் 120 ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். நாம் கண்ட காட்சிக்கு இந்த பணம் போதாது. மேலும் பணம் கொடுக்க தயாரிப்பாளரின் பேங்க் அக்கவுண்ட் டீட்டெயில்களைக் கொடுத்தால் நல்லது.**
**படத்தின் நீளம் குறைவாக இருந்தது. அந்த அனுபவம் ஜஸ்ட் 3 மணி நேரத்தில் முடிந்துவிட்டதை யாரும் விரும்பவில்லை.**
**இவ்வளவு தெளிவாகவும், கச்சிதமாகவும் உருவாகியிருக்கும் படம் பல படைப்பாளிகளின் அவர்களது படைப்புகளின் மீதான நம்பிக்கையையும், தலைக்கனத்தையும், எண்ணத்தையும் உடைத்துவிட்டது. **
**இது முடிவாக இருந்திருக்கக் கூடாது. மேலும் பத்து பாகங்கள் இருப்பதாகக் கூறியிருந்தால், எதிர்காலத்தில் மேலும் பல ஆச்சர்யங்களைக் காணக் காத்திருந்திருப்போம்.**
**கடினமான காலம் முன்னே இருக்கிறது. கஷ்டமான குறிக்கோள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய சினிமாவில் இந்தச் சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் எனத் தெரியவில்லை.**
இப்படி வஞ்சப்புகழ்ச்சி அணியைப் பயன்படுத்தி திட்டுவதுபோல வானளாவப் புகழ்ந்திருக்கும் விக்னேஷ் சிவனின் ட்வீட்டை ஆயிரம் பேர் ரீட்வீட் செய்திருக்கிறார்கள். 3,500 பேர் தங்களது ஃபேவரிட்டாக மார்க் செய்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட்டுக்கு ராஜமௌலி நன்றி சொல்லி ரீட்வீட் செய்திருக்கிறார்.,”
