இந்தியாவுக்கு ராசியான டாஸ் வெற்றி!

Published On:

| By Balaji

இந்தியா மற்றும் இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில், இந்திய அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. அதற்கு பதிலடி தரும் விதத்தில் இந்திய அணி இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது போட்டி நடைபெற்ற மும்பை பிரபௌர்ன் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்கியது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வுசெய்து கடும் தோல்வியைச் சந்தித்தது. அதனால் தனது தவறை சரிசெய்யும்விதத்தில் இந்த முறை டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ADVERTISEMENT

தொடக்க வீரர்கள் சரிவர ரன் அடிக்கத் தவறினாலும், அதன்பின் வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஜார்ஜ் பார்ட்லெட் மற்றும் டேர்லே இருவரும் அரைசதம் அடித்தனர். இருவரும் ஆட்டமிழந்ததும் அதன்பின் வந்த வீரர்கள் அனைவரும் விரைவாக வெளியேற 215 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின்னர் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்களும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கில் 138 ரன்களைச் சேர்த்தார். 45ஆவது ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 216 ரன்களைக் குவித்து வெற்றிபெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி வான்கடே மைதானத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற முதல் போட்டியில் டாஸ் தோற்றிருந்தது. ஆனால் டாஸ் வென்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share