மனிதர்களோடு இயந்திரங்களும், இயந்திரங்களோடு மனிதர்களும் நடத்தும் உயிர் விளையாட்டு ஆகிவிட்டது, இந்தியாவில் நடக்கும் விபத்துகள்.
வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் அளித்திருக்கிறதா?
சென்னையில் மட்டும் நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால், அந்த மேம்பாலங்கள் நெரிசலை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்திவிட்டிருக்கிறதே தவிர, விபத்தைக் குறைக்கவில்லை; நெரிசலையும் குறைக்கவில்லை. சென்னை மட்டுமல்ல; இந்தியா முழுக்க இதுதான் நிலை.
இன்றைய நவீன வாழ்க்கை, நம்மை வேகமாக ஓட வைக்கிறது. உலகம் முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த வாகனங்கள் பயணிக்கும் சாலைகள்? அதுவும் நாள்தோறும் நீண்டு கொண்டே இருக்குமா என்ன? இதுதான் இன்று பெருகி வரும் சாலை விபத்துகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. இதுமட்டும் தானா என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. நகரமயமாதலும், சாலை விதிமீறலும் இங்கு முக்கியக் காரணிகளாகின்றன.
மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்காரி சமீபத்தில் ஓர் அறிக்கை அளித்தார். அதன்படி நம் நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் விபத்துகள் நடந்துள்ளன. அதில் 1,46,000 பேர் உயிரிழந்துள்ளனர்; மூன்று மடங்கினர் காயமடைந்துள்ளனர். அதாவது, இந்தியாவில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பையில்தான் அதிக எண்ணிக்கையிலான விபத்துகள்.
போக்குவரத்து ஆராய்ச்சி தகவலின்படி, 2014ம் ஆண்டில் 4,89,400 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,39,671 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4,93,474 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். ஆனால், 2015ம் ஆண்டைப் பொருத்தவரை, 5,01,423 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,46,133 பேர் உயிரிழந்தனர். மேலும் 5,00,279 பேர் காயமடைந்தனர். கடந்த 2014ம் ஆண்டைவிட 2015ம் ஆண்டில்தான் அதிகம் விபத்துகள் நடந்துள்ளன. அதாவது கடந்த ஆண்டை விட, விபத்துகள் 2.5 சதவிகிதமும், பலியானவர்கள் 4.6 சதவிகிதமும், காயமடைந்தவர்கள் 1.4 சதவிகிதமும் அதிகமாகி இருக்கிறது. இந்த கொடூர விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, 2014ம் ஆண்டில் 28.5 சதவிகிதமாகவும், 2015ம் ஆண்டில் 29.1 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்த தகவலானது, இந்தியாவிலேயே 2015ல் மட்டும் 1,374 விபத்துகளில், 400 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை தெளிவாக எடுத்து சொல்கிறது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், இந்தியாவில் ஒருமணி நேரத்துக்கு 57 விபத்துகளில் 17 பேர் பலியாகின்றனர்.
இந்த விபத்துகளில் 15 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்தான் பலியாகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. அது இன்னும் கொடுமையான விஷயம். அதிக விபத்துகளில் கீழ்கண்ட இந்த 13 மாநிலங்களில் தமிழகமே முன்னணி வகிக்கிறது. தமிழ்நாடு (69,059), மகாராஷ்டிரா (63,805), மத்திய பிரதேசம் (54,947), கர்நாடகா (44,014), கேரளா (39,014), உத்தரப்பிரதேசம் (32,385), ஆந்திர பிரதேசம் (24,258), ராஜஸ்தான் (24,072), குஜராத் (23,183), தெலங்கானா (21,252), சட்டீஸ்கர் (14,446), மேற்கு வங்காளம் (13,208), ஹரியானா (11,174). ஒட்டு மொத்தமாக 86.7 சதவிகித விபத்துகள் இந்தியாவில் நடந்துள்ளன. அதில் ஒட்டுநரின் கவனக்குறைவால் மட்டும் 83.6 சதவிகிதம் விபத்துகள் நடந்துள்ளன. இது, இந்த 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெளிவாகிறது. உலகில் 50 மில்லியன் நகரங்களில் 22.1 சதவிகிதம் விபத்துகள் நடக்கின்றன. இதில் 11.3 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். 16.4 சதவிகிதம் பேர் காயமடைகின்றனர். குறிப்பாக மும்பையில் 23,468 விபத்துகள் நடந்துள்ளன. தலைநகரமான டெல்லியில் நடந்த விபத்துகளில் 1,622 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகளில் 50 மில்லியன் நகரங்களின் பங்களிப்பில் விபத்தின் கொடூரமான தன்மையை 2014ம் ஆண்டில் 15.0 சதவிகிதமாகவும், 2015ம் ஆண்டில் 14.9 சதவிகிதமாகவும் இருக்கிறது. இதில் 2015ல், ஒட்டுநரின் கவனக்குறைவால் மட்டும் 77.1 சதவிகிதம் விபத்துகள் நடந்துள்ளன. 2014ம் ஆண்டில் 78.8 சதவிகிதம் விபத்துகள் நடந்துள்ளன. வாகன ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்லுதல், சாலை விதிமுறைகளை மீறுதல் போன்ற முறைகேடுகளால் 62.2 சதவிகிதம் விபத்துகள் நடந்தன. அதாவது 3,86,481 விபத்துகள் அதிவேகமாக செல்வதாலும், சாலை விதிமுறைகளை மீறுவதால் 2,40,463 விபத்துகளும் நடக்கின்றன. இதில் 61.0 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர்.
இதுதொடர்பாக அமைச்சர் நிதின் கட்காரி, “இந்தியாவில் 2020-க்குள் விபத்தில் பலியாகும் எண்ணிக்கையை 50 சதவிகிதமாக குறைப்பதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். மேலும், சாலை விபத்துகளை தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். பொறியாளர்களின் உதவியால் சாலை கட்டமைப்பை விபத்துகளை தவிர்க்கும்வண்ணம் மாற்றி அமைப்பது, வாகனங்களில் பாதுகாப்பான கருவிகள் பொருத்துதல் மட்டுமின்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த என ஒட்டுமொத்தமாக விபத்துகளைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்த உள்ளோம்” என்கிறார்.
மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகிவிட்ட விபத்துகளைத் தடுக்கத் தேவை அவசர, அவசிய நடவடிக்கை!
