இடம் மாறிய இதயம்!

Published On:

| By Balaji

நம் எல்லோருக்கும் இதயம் இடது பக்கம் தான் இருக்கும். ஆனால், மகாராஷ்டிராவில் சங்கேத் என்ற சிறுவனுக்கு இதயம் வலது பக்கத்தில் இருந்திருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் சங்கேத். இவர் நண்பர்களுடன் விளையாடும் போது அடிக்கடி இவரது தோல் நீல நிறமாக மாறிவிடும். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கேத்தின் பெற்றோர்கள், என்ன குறைபாடு என அறிவதற்கு பல மருத்துவர்களை பார்த்தனர். கடைசியாக அவர்கள் மும்பை, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின், தலைமை இதயவியல் நிபுணர் ஷிவபிரகாஷ் கிருஷ்ணநாயக்கை பார்த்ததன் மூலமாக பிரச்சனைக்கு விடியல் கிடைத்திருக்கிறது.

சங்கேத்தின் இதயம் இடதுபக்கமாக இருப்பதற்கு பதிலாக வலதுபக்கம் இடம் மாறியிருக்கிறது. இதயம் மட்டுமல்லாமல் இதய அறைகளான ஆரிக்கள் மற்றும் வெண்ரிக்கள் (auricles and ventricles) என இரண்டு அறைகளும் இடம் மாறியிருக்கிறது. மேலும் இதயத்தில் ஒரு ஓட்டை இருப்பதாகவும் ஷிவபிரகாஷ் கிருஷ்ணநாயக் கூறியுள்ளார்.

இதய அறைகளை சரியான இடங்களில் பொருத்தி, நுரையீரலுக்கு செல்லும் ஆரிக்களில் பசுவின் இதயகுழாயைப் பயன்படுத்தி, இதய ஓட்டையையும் சரிசெய்து, மிகுந்த நிபுணத்துவம் தேவைப்பட்ட இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை ஆறு மணி நேரத்தில் முடித்திருக்கிறார்.

இது பற்றி சங்கேத்தின் அம்மா துவாரகா கூறியதாவது:

அறுவை சிகிச்சை குறித்து பயத்துடன் இருந்தோம். சங்கேத் கண் விழித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சங்கேத் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அழகாக சிரிக்கிறான். மேலும் நாங்கள் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து என் மகனைக் காப்பாற்றியிருக்கின்றனர். அவர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் துவாரகா கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற அரிய வகை குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தனி கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share