இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங், தோனி ஆகியோரின் அதிரடி சதத்தால் இந்திய அணி 382 என்ற பிரம்மாண்டமான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராய் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடினர். ஆனால் 28 ரன்கள் எட்டியபோது 14 ரன்னில் ஹேல்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். பும்ரா வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் ராயுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன் சேர்த்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன் குவிக்க 54 ரன்கள் குவித்த நிலையில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார். அதன்பின் ராய் 82, ஸ்டோக்ஸ் 1 என விக்கெட்டை பறிகொடுத்தனர். இ்தனால் இங்கிலாந்து அணி 206 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
அதன்பின் கேப்டன் மோர்கனுடன் மொயின் அலி இணைந்தார். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் சரியக் கூடாது என பொறுமையாகவும் அதே சமயத்தில் ரன் விகிதத்தையும் சரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டனர். மேலும் இருவரும் அரை சதத்தை கடந்து வெற்றியை நோக்கி அணியை முன்னேற்றிக்கொண்டே இருந்தனர். அந்த நிலையில் 299 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி புவனேஷ்வர் குமார் பந்தில் போல்டாகி 55 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த வோக்ஸ் 5 ரன்னில் பும்ரா பந்தில் வெளியேறினார். இதனால் அந்த அணி 30 பந்துகளில் 72 ரன்கள் தேவை என்ற நெருக்கடிக்குள்ளானது. ஆனாலும் கேப்டன் மோர்கன் கடைசி வரை விடாமல் போராடினார். 12 பந்தில் 33 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. சதத்தை பூர்த்தி செய்த மோர்கனை பும்ரா ரன் அவுட் செய்து வீழ்த்தினார். இதனால் இந்திய அணி சற்று நிதானம் அடைந்தது. இருப்பினும் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.
