ஆய்வு செய்யாததே அணை உடைவுக்குக் காரணம்: ஸ்டாலின்

Published On:

| By Balaji

முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீரை அதிகமாகத் திறந்துவிட்டதே மதகு உடைந்ததற்குக் காரணம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி, முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகள் கடந்த 22ஆம் தேதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆற்றில் செல்லும் அதிக வெள்ளம் காரணமாக பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியையும் சீரமைப்புப் பணிகளையும் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 3) பார்வையிட்டார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாகத் திறக்கப்பட்டதால் மதகு உடைந்துள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு அணையை ஆய்வு செய்து தண்ணீர் திறந்து விட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பணியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

இந்த அணையை ஆய்வு செய்ய வந்த முதல்வர், காய்ச்சல் சொல்லிக்கொண்டு வருவது கிடையாது, திடீரென வரும் என அணை குறித்துச் சொல்லியுள்ளது, ரோம் நகரம் பற்றி எரியும் நேரத்தில் நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததைப் போன்றுள்ளது. நீரோ மன்னனின் வாரிசு போன்று ஒரு அபூர்வ கருத்தை அவர் கூறியுள்ளார்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்குத் தண்ணீர் சென்றடையவில்லை. இந்த ஆட்சியில் கமிஷன்கள் தூர்வாரப்படுகிறதே தவிர, கால்வாய்கள் தூர்வாரப்படுவதில்லை. இந்த ஆட்சி கோமா நிலையில் உள்ளது” என்றார்.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share