ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் இழுக்க உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம் இன்று (மார்ச் 21) சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் உள்ள தியாகராஜர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மிகவும் பிரசித்திப் பெற்றது அங்கு நடைபெறும் ஆழித் தேரோட்டம்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இந்த ஆழித்தேர். திருச்சியில் உள்ள பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் ஆழித்தேரில் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆழித்தேரின் எடை 220 டன் ஆகும். 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆழித் தேர் அலங்கரிக்கப்படுகிறது.
இதைத் தவிர, தேரின் முன்புறம் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் ஆழித்தேர் வடிவமைக்கப்படுகிறது. இத்துடன் சேர்த்து தேரின் மொத்த எடை 350 டன் ஆகும்.
ஆழித்தேரினை வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்ற ஐதீகமும் அந்த பகுதிகளில் நிலவி வருகிறது.
ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே தற்போது திருவிழா கோலம் பூண்டுள்ளது.
காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வடம் இழுக்க, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் இன்று காலை மிகச்சிறப்பாகவும், விமர்சையாகவும் நடைபெற்று வருகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 4 வீதிகளைச் சுற்றி இந்த ஆழித் தேரோட்டம் நடைபெறும்.
இந்த தேரோட்ட விழாவையொட்டி, வெளி மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் திருவாரூர் வந்துள்ளனர்.
ஆழித்தேரோட்ட விழாவிற்காக திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…