ஆதிச்சநல்லூர் அகழாய்வு: ஆச்சரியமான கார்பன் டேட்டிங் முடிவு!

Published On:

| By Balaji

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்று கார்பன் டேட்டிங் சோதனையில் தெரியவந்ததாகத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். தூத்துக்குடி சிவகளை பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக் கோரியும் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று நடந்த விசாரணையின்போது, ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை என்று தெரிவித்தது நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு.

ADVERTISEMENT

நேற்று (ஏப்ரல் 4) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்கள் அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தில் உள்ள ஆராய்ச்சி நிலையத்துக்குச் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘கார்பன் டேட்டிங்’ முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், ஒரு பொருளின் வயது கிமு 905 என்றும், இன்னொன்றின் வயது கிமு 791 என்றும் கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார் மத்திய தொல்லியல் துறையின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர். இதைத் தொடர்ந்து, விரிவான ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் தேவையென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத் தொல்லியல் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன் வாதத்தில், சிவகளை பகுதியில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் கிமு 395 காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தற்போது கண்டறியப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவில் உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பது தெரியவருவதாகக் கூறினர். “இந்த கார்பன் டேட்டிங் முறையில் ஆதிச்சநல்லூரில் இரண்டாம்கட்ட ஆய்வுகள் நடத்தப்படுமா? அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வது மத்திய அரசா, மாநில அரசா?” என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share