ஆட்சிக்கு வந்தால் அதிக நிதி: தூத்துக்குடியில் அமித் ஷா

Published On:

| By Balaji

“மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வளர்ச்சிக்கு முன்பை விட அதிகமாக நிதி ஒதுக்குவோம்” என்று தூத்துக்குடியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், தூத்துக்குடியில் இன்று (ஏப்ரல் 2) தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழிசை, “எனக்கு தொண்டர்களின் இல்லம் தெரியும், சாமானிய மக்களின் முகவரி தெரியும், தலைவர்களின் இல்லம் தெரியும். ஆனால் திகார் சிறை முகவரி தெரியாது. அதுதான் எனது தகுதி. தூத்துக்குடி தொகுதிக்காக மினி பட்ஜெட்டே போட்டுவைத்துள்ளேன். அமித் ஷா நடந்துவந்தாலே வெற்றிதான். இப்போது பறந்தே வந்துள்ளார். கண்டிப்பாக தூத்துக்குடி கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும், எந்த தியாகம் செய்தாவது வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.

தமிழிசையை தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாடு வளம்பெற மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். மக்களுக்கு சேவை செய்யக் கூடிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியைப் பார்த்து ஸ்டாலின் பயந்து மேடையில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசிவருகிறார். சில துரோகிகள் செய்த சதியின் காரணமாக சட்டமன்ற இடைத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சதிகாரர்களையும் சூழ்ச்சிக்காரர்களையும் வீழ்த்தி மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் சட்டமன்ற இடைத் தேர்தலில் 18 இடங்களிலும் வெற்றிபெறுவோம்” என்றவர், விவசாயத் திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்துவருவதாகவும், ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தேர்தலுக்கு பிறகு ரூ.2000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய திமுக ஆட்சியில் 243 ஏக்கர் ஆலை நிர்வாகத்துக்கு கொடுக்கப்பட்டதாகவும், அந்த காலகட்டத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின் என்றும், தற்போது தங்கள் மீது பழிசுமத்துவதாகவும் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, “கலைஞரின் மகள் கனிமொழியை வெல்லக் கூடிய சக்தி தமிழிசைக்குத்தான் உள்ளது. பொய் பிரச்சாரம் செய்யும் கனிமொழியை வீழ்த்தி தமிழிசை வெற்றிபெறுவார்” என்றார்.

இறுதியாக பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, “கடந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டபோது, மிகப்பெரிய கூட்டணி இல்லை. பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே வெற்றிபெற்றார். ஆனாலும் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் என இரு தமிழர்களை நாங்கள் மத்திய அமைச்சராக்கினோம். சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி தமிழகத்தில் 30 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்ற தகவல் வந்திருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் மோடியை பிரதமராக்க வேண்டும் என விரும்புகிறார்கள்” என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, “தென்மாநிலங்களை பாஜக கண்டுகொள்ளாமல் இருந்ததில்லை. கேரளாவிலிருந்து 4 மாநிலங்களவை உறுப்பினர்களை வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுத்து மாநிலங்களவைக்கு அனுப்பியது பாஜகதான். மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமையும். அப்போது தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிகமாக நிதி ஒதுக்கி தமிழகத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்வோம்” என்று உறுதியளித்தவர், திமுக கூட்டணி வேட்பாளர்களான ஆ.ராசா, கனிமொழி, கார்த்தி சிதம்பரம் அனைவருமே ஊழல்வாதிகள். அதற்காக இவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.

தமிழகத்திற்கு 13வது நிதி கமிஷனில் காங்கிரஸ் வழங்கிய நிதியைவிட 14வது நிதி கமிஷன் மூலம் பாஜக அதிக நிதியை வழங்கியுள்ளது. அதைவிட அதிகமான தொகையை இனி தமிழகத்திற்கு அளிப்போம் என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார். தமிழகத்திற்கு பாஜக அரசு ஒதுக்கியுள்ள நிதிகளைப் பட்டியலிட்ட அமித் ஷா, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. 40 தொகுதிகளிலும் எங்களை வெற்றிபெற வைத்தால் தமிழகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளிப்போம்” என்றும் உறுதியளித்தார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share