உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தரமணியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “உயர் நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் மக்களுக்கு எளிதில் சென்றடையும். கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பை மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை தமிழிலும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்து இன்று (ஜூலை 14) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தமிழ்நாட்டு மக்களும், சட்டப்பேரவையும் எந்த கோரிக்கையை முன்வைத்து 13 ஆண்டுகளாக காத்துக் கிடக்கின்றனரோ, அதே கோரிக்கையின் ஒரு பகுதியை குடியரசுத் தலைவரே வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்” என்றுள்ளார்.
மேலும், “இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவரை விட கூடுதல் தொலைநோக்குடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் இருந்தால் மட்டும் போதாது; உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையே உள்ளூர் மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி 2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்று குறிப்பிட்டவர்,
தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால், புதிய குடியரசுத் தலைவரின் கனவு நனவாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
“இப்போது நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு எப்படியெல்லாம் தட்டிக்கழிக்கிறதோ, அதேபோல் தான் அப்போதும் உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய மத்திய அரசும் தட்டிக் கழித்தது.” என்று குற்றம்சாட்டிய ராமதாஸ்,
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தீர்மானத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய அவர்கள் முன்வராத பட்சத்தில் தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து சாதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**





