(
இந்தியாவில் டாக்ஸி போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களில் உபேர் முன்னணியில் உள்ளது. இந்தியச் சந்தையில் தனது முதலீட்டை இரட்டிப்பாக்கி, தனது சேவைகள், கூட்டணி, தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்தப்போவதாக உபேர் தெரிவித்துள்ளது.
இதுபற்றி உபேர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான பார்னே ஹார்ட்ஃபோர்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் ஒரு முக்கியச் சந்தையாக இருக்கும். இந்தியாவின் வெற்றிக்கும் உபேரின் வெற்றிக்கும் தொடர்பு உண்டு. முன்பை விட நாங்கள் எங்களின் முதலீட்டை இந்தியாவில் இரட்டிப்பாக்க உள்ளோம். தென் கிழக்கு ஆசியாவில் நாங்கள் ஒரு ஒப்பந்தத்தைப் பிடித்துள்ளோம். இதனால் எங்களின் மூலதனம் சேமிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் இந்த நாட்டிற்கும் அதில் நாங்கள் சேவை புரியும் நகரங்களுக்கும் பயன்படுத்த உள்ளோம்” என்று கூறினார்.
இந்தியாவில் ஓலாவும் உபேரும் இணைவதாகச் சில தகவல்கள் வெளியாகின. ஓலாவில் முதலீடு செய்த சாப்ட்பேங் நிறுவனம் உபேரிலும் 100 கோடி டாலர் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. அதனால் இரு நிறுவனங்களும் இணைய வாய்ப்பிருப்பதாகப் பேச்சுகள் எழுந்தன. இந்தியாவைத் தாண்டி, ஆஸ்திரேலியாவிலும் இவ்விரு நிறுவனங்களும் போட்டி போட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஓலா நிறுவனம் ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் பெர்த் ஆகிய நகரங்களில் தனது சேவையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
