அடிப்படை வசதிகள் கோரி: மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Balaji

ஜெயங்கொண்டம் அருகே மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டு ஆகியும் போதிய வகுப்பறை மற்றும் ஆய்வக வசதி இல்லை எனக் கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோன்று கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

**பள்ளி மாணவர்கள் சாலை மறியல்**

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளி, கடந்தாண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் ஆய்வக வசதி இல்லாத காரணத்தால், மாணவர்கள் 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும், இந்தப் பள்ளியில் கழிப்பறை வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்டக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவர்கள் 3 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, உடனடியாகக் கழிப்பறை மற்றும் ஆய்வக வசதி அமைத்துத் தரப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து, மாணவர்கள் மறியலைக் கைவிட்டு சென்றனர்.

**கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்**

கும்பகோணம் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து நேற்று (ஜூலை 12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால் நிர்வாகம் தங்களை மிரட்டுவதாகக் கூறி, நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடிய அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share