வேலையில்லாத் திண்டாட்டம் என்பது உலகளவில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலையில் வேலைக்குச் செல்பவர்களாலேயே தங்களின் தேவைகளை முழுதாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வேலைக்குச் செல்லாதவர்களின் நிலை என்பது இன்னும் பரிதாபகரமானது.
இந்நிலையில், ஐரோப்பாவிலேயே முதல் நாடாக, வேலைக்குச் செல்லாதவர்களுக்கு மாதாமாதம் கட்டாய ஊதியம் வழங்குவதைச் சோதனை முயற்சியாகக் கடந்த ஜனவரி மாதம் ஃபின்லாந்து தொடங்கியது. அதன்படி, 25 முதல் 58 வரையிலான வயதில் வேலைக்குச் செல்லாமல் உள்ளவர்களுக்குக் கட்டாய ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்குத் தோராயமாக 600 டாலர் வழங்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு இந்தச் சோதனை முயற்சி நடைபெறும். இந்நிலையில், தொடங்கப்பட்டு 5 மாதங்கள் கடந்த நிலையில், இத்திட்டம் வேலைக்குச் செல்லாதவர்களின் மன அழுத்தத்தைப் பெருமளவு குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலரும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொகை குறைவுதான் என்றாலும் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது போதுமானதாகவே இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்திட்டம் நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குகிறது என இத்திட்டத்தில் பலனடைந்து வரும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பின்னர் வேலைக் கிடைத்தால் அவர்களுக்குத் தொடர்ந்து அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இத்திட்டம் வெற்றியடைந்துள்ளதா இல்லையா என்பதை இப்போது தெரிவிக்கமுடியாது என இத்திட்டத்தைச் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்பு நிறுவனமான கேலாவைச் சேர்ந்த மர்ஜுக்கா டுருனென் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ”இத்திட்டம் தொடர்பாக ஊடகங்களில் பேசும் பங்கேற்பாளர்களின் கருத்து மொத்த பங்கேற்பாளர்களின் கருத்து அல்ல. அடுத்த வருட முடிவில் கிடைக்கும் தகவல்களை வைத்து இந்தச் சோதனை முயற்சியின் முடிவுகள் கவனமாக அலசப்படும். இந்தத் திட்டத்தின் பயனாக சிலர் வேலைக்குச் செல்லக்கூடும். சிலர் வீட்டிலேயே இருக்கக்கூடும்” என்று கூறியுள்ளார். பல ஐரோப்பிய நாடுகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன.