அண்ணாவின் “சீற்றம் மிகுந்த அடங்க மறுக்கும் குமுறல்” மீண்டும் வெடிக்கும் காலத்தில், அவரைக் கொண்டாடுவோம்.
இன்று அண்ணாவின் பிறந்தநாள். அவரை நினைத்துப்பார்க்க ஒரு முக்கிய நிகழ்வை துணைக்கழைக்கிறேன்.
ஜனவரி 25, 1963. பிற்காலத்திய மொழிப்போர் ஈகியர் நினைவுநாள் தோன்றுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு, பிரிவினைவாதத் தடைச்சட்டம் என்று கூறப்படும் இந்திய அரசியல்சாசனத்தின் 16 ஆவது சட்டத்திருத்தம் தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் எழுகிறது.
தன் தனிநாட்டுரிமைக்காகப் போராடும் உரிமைக்காக தீவீரமாகவும் ஆழமாகவும் வாதித்துக்கொண்டிருக்கிறார் அண்ணா. தடைச்சட்டத்துக்குப் பிறகு திமுக தலைமறைவாக ஆகுமோ என்று அவையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா கேட்ட ஒரு கேள்வியைப் பற்றி அண்ணா பேசுகிறார். அப்போது அண்ணா சொல்கிற பதிலில் மிகவும் முக்கியமான ஒரு கருத்து, அண்ணாவின் மனநிலை வெளிப்படுகிறது.
“எனது நண்பர் திரு. பூபேஷ் குப்தா, நாங்கள் தலைமறைவாக ஆகக்கூடும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். நாங்கள் எப்போதும் வெளிப்படையாகவே இயங்கிவருகிறோம், வருவோம். தலைமறைவாக ஆவதில்லை என்பதே எங்கள் முடிவு. ஆனால், நிச்சயமாக, இந்த சீற்றம் மிகுந்த அடங்கமறுக்கும் குமுறல் தலைமறைவாக ஆகும்” (My friend, Mr.Bhupesh Gupta, was saying that we may go underground. Now, we always remain on the ground. We propose not to go underground. But surely the sullen discontent will go underground).
The sullen discontent என்பதைத்தான் சீற்றம் மிகுந்த அடங்க மறுக்கிற குமுறல் என்று நீட்டமாக மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த வார்த்தைகளுக்குள் பொதிந்திருக்கும் பொருள் அவ்வளவு தீவிரமானது. இந்தக் குமுறல் மனநிலை தலைமறைவாக ஆகும் என்றால் என்ன பொருள்? ஒரு போராளி தலைமறைவாகிறார் என்றால் அவர் வெளிப்பார்வைக்கு தென்படாவிட்டாலும் உள்ளே தொடர்ந்து இயங்குகிறார் என்று பொருள். அதே பொருள்தான் இங்கும். நாங்கள் வெளிப்படையாக செய்யமுடியாவிட்டாலும் இந்த சீற்றமிகு மனக்குமுறல், கோபக்கனலாக வீசுகிற அதிருப்தி, நீறுபூத்த நெருப்பு “தலைமறைவாக” இருக்கும் என்கிறார் அண்ணா. நான் அதைத்தான் சொன்னேன் என்று இதற்கு பதில் சொன்னார் பூபேஷ் குப்தா.
அண்ணா தொடர்ந்து பேசினார்: “சீற்றம் மிகுந்த அடங்க மறுக்கும் இக்குமுறல் தலைமறைவாக ஆகும். அதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது. லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் உறைந்துள்ள குமுறலை சண்டையிட்டு ஒழித்துவிடக்கூடிய ஒரு சக்தியை அரசியல் தத்துவம் இதுவரை கண்டறிந்திருக்கவில்லை. ஆதலால், இந்த நடவடிக்கையின் மூலமாக, அந்தக் குமுறலை, அந்தச் சீற்றம் மிகுந்த அடங்கமறுக்கும் குமுறலை, உண்மையான உள்ளக் குமுறலை நீங்கள் தலைமறைவாகும்படி செய்கிறீர்கள்” (The sullen discontent will go underground which cannot be countenance by any measure. Political philosophy has not yet formulated a measure to fight out hidden discontent in the minds of millions. And, therefore, by this measure you are driving discontent, sullen discontent, sincere discontent, under ground).
அன்று தலைமறைவான சீற்றம் மிகுந்த அடங்க மறுக்கும் அதிருப்தி தமிழ்நாட்டில் பலதடவைகள் தலைதூக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. அது அண்ணா தொடங்கியக் கட்சிக்கு எதிராகவும் அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சிக்கு எதிராகவும் அண்ணாவால் ஒருபோதும் தோழமையென ஏற்றுக்கொள்ளப்படாத காங்கிரசுக்கு எதிராகவும் அன்றே இவ்விவகாரத்தில் அண்ணாவின் மீது பாய்ந்த வாஜ்பாயியின் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் பல தடவை தலைதூக்கியிருக்கிறது.
பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர், அண்ணா என்றால் அடுக்குநடை பேச்சாளர் என்பதாக மட்டுமே நம் மனத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. விடுதலையைக் கைவிட்டவர் அண்ணா என்கிற அளவில் மட்டுமே அவர் மீதான விமர்சனம் நின்றுவிடுகிறது. எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் தமிழறிவு பலிகொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் அண்ணா. அந்த சீற்றமுக கோபக்கனல் கொண்ட குமுறல் எங்களுக்கும் இருப்பதால் உங்களை நாங்கள் மீண்டும் கண்டடைந்திருக்கிறோம். நீ எங்கள் தோழனாய் இரு.
பிறந்தநாள் வாழ்த்துகள், அண்ணா.
நன்றி: ஃபேஸ்புக் பதிவு
Aazhi Senthil Nathan
