ADVERTISEMENT

93 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி நூலகமாக மாற்றம் !

Published On:

| By admin

பெங்களூரு அசோக் நகர் கமிஷனர் அலுவலக சாலையில் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த தமிழ்ப்பள்ளி கடந்த 93 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகு இந்தியாவில் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த தமிழ்ப்பள்ளி கர்நாடக அரசால் மாநில கல்வித்துறையின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கன்னடம் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள் பெங்களூருவில் அதிகரித்தன. இதனால் இந்த தமிழ்ப்பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. கர்நாடக கல்வித்துறையும் இந்த தமிழ்ப்பள்ளியை கண்டுகொள்ளவில்லை. இந்த பள்ளியை புனரமைப்பது, நிதி ஒதுக்குவது, மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது இப்படி எந்த செயலையும் செய்யாமல் இருந்து வந்தது.

ADVERTISEMENT

தற்போது இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. அதில் 9 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளியை புனரமைக்கும் பணியை மாநில அரசு, கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் இந்திய தேசிய அறக்கட்டளையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.இதன்மூலம் இந்த தமிழ்ப் பள்ளிக்கு புதுப்பொலிவு பெற உள்ளது.

இதுபற்றி மக்கள் தொடர்பு துறை கமிஷனர் விஷால் கூறுகையில், “இந்த பள்ளியின் கட்டிட வடிவமைப்பு ஆங்கிலேயர்கள் மற்றும் அங்குள்ள காலனிகளின் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. அதனால் அந்த கட்டிடக்கலை மாறாமல் அப்படியே அதை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த பள்ளியில் மொத்தம் 5 வகுப்பறைகள் உள்ளன. அவற்றில் 2 வகுப்பறைகளை பள்ளிக்கு கொடுத்துவிட்டு, மற்ற 3 வகுப்பறைகளை நூலகமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.” என்று அவர் கூறினார். 1 முதல் 3ஆம் வகுப்பு வரையில் ஒரே அறையிலும், 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளை ஒரு அறையிலும் வைத்து பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share