மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

வெட்டப்படும் மரங்கள்: ஆட்சியருக்கு உத்தரவு!

வெட்டப்படும் மரங்கள்: ஆட்சியருக்கு உத்தரவு!

மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். தனது கிராமத்தைச் சுற்றி இருக்கும் சுமார் 100 வேப்ப மரங்களை 2 தனிநபர்கள் வெட்டி வருவதாகவும், இதற்கு பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் துணையாக இருப்பதாகவும், அதில் தெரிவித்திருந்தார்.

“இங்கு வெட்டப்படும் மரங்கள் டிராக்டர் மூலம் எடுத்து சென்று விற்கப்படுகிறது. இது தொடர்பாக நெமிலி வட்டாட்சியரிடம் பொது மக்கள் முறையீடு செய்தனர். மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என்று வட்டாட்சியர் தெரிவித்தார். சட்டவிரோதமாக மரங்களை வெட்டி எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அதனால், மரங்களை வெட்டும் சங்கர் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், அவர்கள் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அந்த பகுதியைச் சுற்றி நடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் பழனி தெரிவித்திருந்தார்.

இன்று (அக்டோபர் 11) நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon