மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

ஆப்பிள் நிர்வாகி பலி: மனைவிக்கு அரசு வேலை!

ஆப்பிள் நிர்வாகி பலி: மனைவிக்கு அரசு வேலை!

உத்தரப் பிரதேசத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன நிர்வாகி விவேக் திவாரியின் மனைவி கல்பனா திவாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார் அம்மாநிலத் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான விவேக் திவாரி, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று இரவு தனது தோழியுடன் காரில் பயணம் மேற்கொண்டார். கோமதி நகர் விரிவாக்கப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்கள் சென்ற காரைத் தடுத்து நிறுத்தினர்.

அவர் காரை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் பிரசாத் சவுத்ரி, சந்தீப் இருவரும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். அவரது காரின் முன்பக்கத்தில் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே விவேக் திவாரி உயிரிழந்தார். தன் கணவர் பலியான விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று போராட்டம் செய்தார் விவேக்கின் மனைவி கல்பனா.

இதையடுத்து பிரசாந்த் சவுத்ரி, சந்தீப் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட திவாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம், அவரது குழந்தைகளின் கல்விச் செலவுக்கு ரூ.5 லட்சம், அவரது வயதான தாயாருக்கு ரு.5 லட்சம் என மொத்தம் ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று, கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விவேக்கின் மனைவி கல்பனா திவாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை இன்று (அக்டோபர் 11) துணை முதல்வர் தினேஷ் ஷர்மா நேரில் சென்று வழங்கினார்.

“விவேக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்த விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அரசின் நடவடிக்கைகள் எனக்குத் திருப்தி அளிக்கிறது” என்று கல்பனா திவாரி தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon