மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

வீட்டு வரி வசூல் ஊழல்: விசாரணைக்கு வலியுறுத்தல்!

வீட்டு வரி வசூல் ஊழல்: விசாரணைக்கு வலியுறுத்தல்!

சென்னையில் வீட்டு வரி வசூல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருவொற்றியூர் மற்றும் அதையொட்டிய குடியிருப்புகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் என்று கூறப்பட்டாலும் அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் பெரிய அளவில் செய்யப்பட வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் வீட்டு வரி ஓரளவு நியாயமாகவே இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் வீட்டு வரி கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக்டோபர் 11) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தற்போது, உயர்த்தப்பட்ட வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. சென்னையில் பணக்கார மக்கள் வாழும் பகுதியாகவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் கருதப்படும் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட்நகர் ஆகிய பகுதிகளில் கூடச் சதுர அடிக்குச் சராசரியாக ஒரு ரூபாய் மட்டுமே சொத்துவரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத திருவொற்றியூர் பகுதியில் ஒரு சதுர அடிக்கு ரூ.4.15 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“சென்னையின் மற்ற பகுதிகளில் இருப்பதைவிட திருவொற்றியூரில் நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதைச் செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறி வருகின்றனர். இத்தகைய சூழலில், வீடுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த வீடுகளை மறு மதிப்பீடு செய்து கூடுதல் வரி விதிக்கும் அதிகாரிகள், அந்தக் கூடுதல் வரியை 5 ஆண்டுகள் முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், ஆண்டு வரியாக ரூ. 2000 செலுத்த வேண்டிய வீட்டுக்கு ரூ.41,500 வரி செலுத்த வேண்டியுள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப் படும் வரியை விட இது 20 மடங்குக்கும் அதிகம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அதிக வரி விதிப்பால் மாநகராட்சிக்கு எந்த வகையிலும் கூடுதல் வருவாய் கிடைக்கவில்லை. மாறாக, தவறான நோக்கம் கொண்ட அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் தான் பயனடைகின்றனர். இவை ஒருபுறமிருக்கச் சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் வீட்டு வரி உயர்த்தப்பட்டு, புதிய வரி மதிப்பிடப்பட்டு வருகிறது. அதன்படி, இப்போது இருப்பதை விட இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே மக்கள் வரிச்சுமையையும், விலைவாசியையும் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக உயர்த்தப்படும் வரி மக்களின் சுமைகளை அதிகரிக்கும். மக்களின் சுமைகளை உணராமல் வீட்டு வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமாகும்.

எனவே, மக்களின் சுமைகளை உணர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் வீட்டு வரியைச் சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படுவதற்கு இணையாகக் குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீட்டு வரியைக் குறைத்து நிர்ணயிப்பதற்காக லஞ்சம் வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon