மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

நிலக்கரி: ஒன்றரை நாளில் 33 கோடி ரூபாய் ஊழல்?

நிலக்கரி: ஒன்றரை நாளில் 33 கோடி ரூபாய் ஊழல்?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. ஒன்றரை நாளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் ரூ.33 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் பாமக இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி.

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, வெளிநாடுகளில் இருந்து விதிகளை தளர்த்தி நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி மத்திய பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவிடமிருந்து ஒரு டன் ரூ.2,000 என்ற விலையில் வாங்கப் படுகிறது. ஆனால், இப்போது ஒரு டன் ரூ.5,098 என்ற விலையில் யாசின் இம்பெக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும், ரூ.5008 என்ற விலையில் அதானி நிறுவனத்திடமிருந்தும், ரூ.4,936 என்ற விலையில் ஸ்ரீ ராயலசீமா நிறுவனத்திடமிருந்தும் மொத்தம் 1.10 லட்சம் டன் நிலக்கரியை மின்சார வாரியம் கொள்முதல் செய்துள்ளது. இது வழக்கமாக வாங்கும் விலையை விட 150% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், “ தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரி வாங்குவதாக இருந்தால் முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, குறைந்த விலையை குறிப்பிடும் நிறுவனத்திடமிருந்து தான் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகத்திலுள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, டெண்டர் நடைமுறையிலிருந்து அக்டோபர் ஒன்றாம் தேதியன்று விலக்கு பெறப்பட்டு தனியாரிடமிருந்து அதிகவிலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தமிழக மின் நிலையங்களுக்கு 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டன. இதனால் தமிழக அனல்மின் நிலையங்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி ஒப்பந்தப்புள்ளி நடைமுறையிலிருந்து விலக்கு அளித்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அவசர, அவசரமாக அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? இவ்வளவு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மின்நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததா? ஊழல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இதன் பின்னணி சதி பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அன்புமணி.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon