மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளிவைப்பு!

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளிவைப்பு!

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சென்னை பிஎஸ்என்எல்லின் அதிவேக இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதில் அரசுக்கு ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிராக சென்னை 14ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், வேதகிரி கௌதமன், கண்ணன், ரவி உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டதற்கு ஆவணங்கள் எதுவும் இல்லை. போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (அக்டோபர் 10) மீண்டும் விசாரணைக்கு வந்த போது. கலாநிதி மாறன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள், அமீத் தேசாய், நீரஜ் கிஷன் கவுல் உள்ளிட்டோர் ஆஜராகி, வாதிட்டனர். ஒட்டுமொத்தமாக இந்த குற்றச்சாட்டு என்பதே முற்றிலும் தவறானது. விசாரணை அதிகாரி அனுமானத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருப்பதாகவும் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் எந்தவிதமான ஆதாரங்களும், ஆவணங்களும் அதிகாரியிடம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

“764 இணைப்புகள் பெறப்பட்டதாக தான் விசாரணை அதிகாரி தெரிவிக்கிறார். அவ்வளவு இணைப்புகளை எவ்வாறு பயன்படுத்தினர். அந்த இணைப்புகள் மூலமாக எங்கெல்லாம் பேசப்பட்டது அல்லது பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் விசாரணை அதிகாரியிடம் இல்லை” எனவும் கலாநிதி மாறன் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் சன் டிவியின் நிர்வாக தலைவர் என்ற முறையில் மட்டுமே கலாநிதி மாறன் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் நேரடியாக குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்காக எந்த விதமாக ஆதாரங்களும் விசாரணை அதிகாரியிடம் இல்லை என கூறப்பட்டதோடு, அதன் அடிப்படையில் இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கிலிருந்து விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து உத்தரவிடுவதற்கு முன்னர் அனைத்து விஷயங்களை ஆய்வு செய்ததாகவும் சிபிஐ சார்பில் மனுதாரருக்கு எதிரான எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதன் அடிப்படையிலேயே விசாரணை நீதிமன்றம் இந்த வழக்குகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததாகவும், எந்தவிதமான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.

தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட தரப்பில் வாதங்கள் முடிவடையாத நிலையில் வழக்கின் விசாரணையை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அன்று தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் வாதிடவும் அதனை தொடர்ந்து சிபிஐ தரப்பில் பதில் வாதங்களை எடுத்துவைக்கவும் உத்தரவிட்டார்.

அதுவரை விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதி வரும் 25 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon