மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 14 செப் 2018

ஸ்டெர்லைட்: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

ஸ்டெர்லைட்: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கையளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், அதன் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. ஆய்வுக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, இன்று (செப்டம்பர் 14) ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon