மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 14 செப் 2018

இறந்த பிறகும் உயிர் கொடுத்த தந்தை!

இறந்த பிறகும் உயிர் கொடுத்த தந்தை!

கணவர் விபத்தில் இறந்து ஓராண்டுக்குப் பிறகு, அவரது உயிரணுக்கள் மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார் கண்ணூரைச் சேர்ந்த ஒரு பெண்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சுதாகரன். கல்லூரி ஒன்றில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவருக்கும், கண்ணூர் ஃபெடரல் வங்கியின் கடன் பிரிவு மேலாளராகப் பணிபுரியும் ஷில்னாவுக்கும், 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆன பின்பும், இந்தத் தம்பதியினர் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், 2015 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கல்லூரியின் சக பேராசிரியர்களுடன் நிலம்பூருக்குச் சுற்றுலா சென்றார் சுதாகரன். அப்போது, அவரது மனைவி ஷில்னாவுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வந்ததால், சுற்றுலாவைப் பாதியில் முடித்துக்கொண்டு தனியாக வீடு திரும்ப முடிவு செய்தார். சுற்றுலா சென்ற வாகனத்தை விட்டுக் கீழே இறங்கி, பேருந்தில் ஏறுவதற்காகச் சாலையைக் கடந்தபோது, விபத்தில் சிக்கி சுதாகரன் மரணமடைந்தார்.

கணவர் மரணமடைந்தாலும், சுதாகரன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஷில்னாவும், அவரது உறவினர்களும் விரும்பினர். இதையடுத்து, சுதாகரனின் உயிரணுக்கள் தனியாக எடுத்துப் பாதுகாக்கப்பட்டது. பின்னர், அந்த உயிரணுக்கள் மூலம், மருத்துவர்கள் உதவியுடன் செயற்கை முறையில் ஷில்னா கர்ப்பமானார்.

கண்ணூர் கொயிலந்தி மருத்துவமனையில் நேற்று (செப்டம்பர் 13) காலை 11.50 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் ஷில்னா. தற்போது தாயும் இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon