மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 14 செப் 2018

நோயாளி மரணம்: அப்போலோவுக்கு உத்தரவு!

நோயாளி மரணம்: அப்போலோவுக்கு உத்தரவு!

நோயாளி மரணமடைந்த விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை ரூ. 57.74 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பெஜ்ஜிபூரைச் சேர்ந்த நரசிங்க பதி, குரி பதி ஆகியோரின் மகனான அபானிகுமார் பதி சென்னையில் உள்ள டாக்டர் ரெட்டி லேபரட்டரியில் மாதம் 30,000 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வந்தார். மூலநோய் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அபானிகுமாரின் உடல்நலம் மோசமாக இருப்பதாக, அவரது நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அபானிகுமாரின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தபோது, அவரைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. அவரை வென்டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், மயக்க மருந்து கொடுத்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், நவம்பர் 2ஆம் தேதியன்று அபானிகுமாருக்குத் திடீர் மாரடைப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மயக்கவியல் நிபுணரும் அறுவை சிகிச்சை நிபுணரும் தெரிவித்தனர். அதன்பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மதியம் 1 மணி அளவில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி, 15 நாட்கள் அளித்த சிகிச்சைக்காக 3 லட்ச ரூபாய் அபானிகுமாரின் பெற்றோரிடம் வசூலித்துள்ளனர்.

தனது மகனின் மரணத்துக்கு மருத்துவமனையின் சேவை குறைபாடு மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி, 96 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அபானிகுமாரின் பெற்றோர். இந்த வழக்கு உறுப்பினர்கள் கே.பாஸ்கரன், எஸ்.எம்.முருகேசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அபானிகுமாருக்குத் திடீர் மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சை பலன் இல்லாமல் போகவே அவர் இறந்ததாக அப்போலோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் மருத்துவர் கவனக்குறைவோ அல்லது சேவை குறைபாடோ ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டு, ஆவணங்களை ஆராய்ந்தனர் மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர்கள். அபானிகுமாருக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது, என்ன மாதிரி சிகிச்சை வழங்கப்பட்டது, மயக்க மருந்து ஏன் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை முழுமையாக அப்போலோ மருத்துவமனை நிரூபிக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். அபானிகுமாரின் மரணத்துக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களே காரணம் எனத் தீர்மானிப்பதாகவும், அதனால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

அபானிகுமாரின் மரணத்திற்கு இழப்பீடாக 44 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயும், பெற்றோர்களின் மன உளைச்சலுக்கு 10 லட்ச ரூபாயும், அவர்கள் மருத்துவமனையில் செலுத்திய 3 லட்ச ரூபாயும், வழக்குக்காகச் செலவு செய்ததாக 10 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, மொத்தமாக 57 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை அப்போலோ மருத்துவமனையும், இரு மருத்துவர்களும் வழங்க உத்தரவிட்டுள்ளனர். இந்தத் தொகையை, வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து 6 சதவிகித வட்டியுடன் நான்கு வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon