மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 14 செப் 2018

கிச்சன் கீர்த்தனா: சென்னை ஸ்பெஷல் வடகறி!

கிச்சன் கீர்த்தனா: சென்னை ஸ்பெஷல் வடகறி!

வடகறி என்கிற வார்த்தையைச் சென்னையில்தான் அதிகமாகக் கேட்க முடியும். வடகறிக்கு சென்னையில் ரொம்ப ஃபேமஸ் ஆன ஏரியான்னா அது சைதாப்பேட்டைதான். அப்படிப்பட்ட வடகறியை இன்னிக்கு நம்ம வீட்டுல செஞ்சு சாப்பிடலாமா?

தேவையான பொருள்கள்

கடலைப் பருப்பு - 1/2 கப்

காய்ந்த மிளகாய் - 2

சோம்பு - 1 டீஸ்பூன்

பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கேற்ப

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

மல்லித் தழை - சிறிதளவு

தேங்காய் பால் எடுக்க

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

தாளிக்க

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 இஞ்ச் அளவு

லவங்கம் - 2

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் நறுக்கி வைக்கவும்.

தேங்காய்த் துருவலை மிக்ஸியில் அரைத்து முக்கால் கப் அளவுக்குப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வடைகளாகத் தட்டி சுட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறியதும் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதன்பின், வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும், ஒரு கப் தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிடவும்.

மசாலா வாடை போனதும் அதனுடன் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். பிறகு அதனுடன் வடை துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும். இறுதியில் மல்லித் தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான வடகறி ரெடி!

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது