மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

முதலமைச்சரைச் சந்தித்த ராமநாதபுரம் மீனவர்கள்!

முதலமைச்சரைச் சந்தித்த ராமநாதபுரம் மீனவர்கள்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள். இவர்கள், இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர்.

கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்தது இலங்கை கடற்படை. அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 16 மீனவர்களும், தற்போது சிறையில் உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமநாதபுரம் மீனவர்கள், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள் மற்றும் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 186 விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கடந்த 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள். இதில் சுமார் 3,000 மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களின் வேலைநிறுத்தம் இன்று (ஜூலை 11) மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர் ராமேஸ்வரம் மாவட்ட மீனவப் பிரதிநிதிகள். அப்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை மீட்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon