மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று மதியம் தீர்ப்பு!

18  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று மதியம் தீர்ப்பு!

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 19 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர். அவர்களில் ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பிவிட, மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த பரிந்துரையின் பேரில் கடந்த வருடம் செப்டம்பர் 18ஆம் தேதி சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை முடிந்து கடந்த ஜனவரி 23ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி பதிப்பில் நாம் குறிப்பிட்டதுபோலவே மதுரை அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்த நீதிபதி சுந்தர் இன்று, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகிறார். இதையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் இணைந்து விசாரித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முதலில் இன்று காலை 10.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் பரவியது.

பின் நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் பணிப் பட்டியலில், இன்று மதியம் 1 மணிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வாய்மொழி வாதங்கள், எழுத்துபூர்வ வாதங்கள், விசாரணைகள் என எல்லாமே ஜனவரி 23ஆம் தேதியோடு முடிந்துவிட்ட நிலையில் இன்று மதியம் இவ்வழக்கின் தீர்ப்பு மட்டுமே வழங்கப்படும். எனவே, இன்று காலை முதலே சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்பார்த்து அதிமுக மட்டுமல்ல, திமுக மட்டுமல்ல அனைத்துத் தரப்பு மக்களும் காத்திருக்கிறார்கள்.

தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் இதுகுறித்து நேற்று இரவு நாம் பேசுகையில், “ஜனநாயகத்தை நீதிமன்றம் நிலை நிறுத்தும் என்று நம்புகிறோம்” என்றார் நம்பிக்கையாக.

இரு நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்குவார்களா, மாறுபட்ட கருத்துகள் கொண்ட தீர்ப்பை வழங்குவார்களா? சுமார் பத்து மாதங்களாகத் தமிழகத்தின் 18 தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ. இல்லாத நிலை முடிவுக்கு வருமா? சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட்டு அவரது நடவடிக்கையை ரத்து செய்யுமா? அல்லது சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பே இதிலும் எதிரொலிக்குமா? எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆட்சி நீடிக்குமா?

இப்படி பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் நிலையில் இவற்றுக்கெல்லாம் பதில் இன்று மதியம் கிடைக்கும்!

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon