மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

ஏர்செல் - மேக்சிஸ்: கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஏர்செல் - மேக்சிஸ்: கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை நேற்று (ஜூன் 13) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக, கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனமாகக் கருதப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்து, பணம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் முடக்கியது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இல்லங்களில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஜூலை 10ஆம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் (ஜூன் 12) அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு சிதம்பரம் ஆஜராகி இருந்தார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் சிதம்பரத்தை ஜூலை 10ஆம் தேதி வரை கைது செய்வதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 13) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் ரவி விஸ்வநாதன் மற்றும் பத்மா , கார்த்தி சிதம்பரம், செஸ் மெனேஜ்மெண்ட் சர்விசஸ் பிரைவேட் லிமிட் இயக்குநர் அண்ணாமலை பழனியப்பன் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கூடுதல் அமர்வு நீதிபதி ரூபி அல்கா குப்தா, கார்த்தி சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை ஜூலை 4ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon