மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

கர்நாடகாவில் பிரகாஷ்ராஜ், தமிழகத்தில் அமீர்

கர்நாடகாவில் பிரகாஷ்ராஜ், தமிழகத்தில் அமீர்

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதைக் கண்டித்து ஒன்பது வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் சீமானோடு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர்., நேரடி அரசியலுக்கு வராமல் சினிமாவிலேயே கால் நனைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 8ஆம் தேதி புதிய தலைமுறை வட்டமேஜை கருத்தரங்கமும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் அமீரையும் நேரடி அரசியலுக்குள் இழுத்து விடத் தொடங்கிவிட்டன.

பாஜகவுக்கு எதிராக இந்த நிகழ்வில் அமீர் பேசிய பேச்சுகளுக்காக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. அதற்கு பல கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த பின்னணியில் தனக்கு ஆதரவளித்த அத்தனை பேரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்து விரிவானதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமீர்.

இன்று (ஜூன் 13) அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை நிகழ்வு பற்றி தனது கருத்துகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதில் பாஜக மீது கடுமையான சாடல்களையும் முன் வைத்துள்ளார்.

“கடந்த 8ஆம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தனர். எல்லா கருத்துக்களையும் கேட்டு யார் தங்களின் குரலாகப் பேசுகிறார்களோ, அவர்களுக்கு பெரும் ஆதரவை அந்த அரங்கினுள் இருந்த மக்கள் அளித்து வந்தனர்.

அந்த வரிசையில் நானும் என் கருத்தை முன் வைக்த போது அங்கிருந்த சிலர், கருத்தை - கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், தக்க பதில் அளிக்கத் தெளிவில்லாமல், மத துவேஷத்துடன், ஜனநாயகத்திற்கு எதிரான வகையிலும், பொது சபையின் கண்ணியத்தைக் காக்காமலும், என்னைப் பேசவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, சட்டம்-ஒழுங்கை குலைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

சமீப காலமாக, தேசத்தை ஆளுகின்ற தேசியக் கட்சி, அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுகின்றவர்களுக்கு புதிய பட்டங்கள் சூட்டுவதும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்வதும், சில நேரங்களில் நடக்காததைக் கூட நடந்ததாக கூறுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மேலும், தாங்கள் செய்தவற்றையெல்லாம் மறைப்பதோடு எதிரே நிற்பவர்களின் மேல் வீண் பழியை சுமத்துவதிலுமே குறியாக இருக்கின்றனர்.

அந்த வகையில் தான் அன்றைய தினமும், நானும் மற்ற தலைவர்களும் தேசியக் கட்சியின் பிரதிநிதி பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டோம். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, நடந்த உண்மையை, சில சம்பவங்களை நான் முன் வைத்த போது, “பேசக்கூடாது.. மீறினால் கடும் விளைவுகளைச் சந்திப்பாய்..!” என்று சர்வாதிகாரமாக உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், என்னைத் தாக்குவதற்கும் முற்பட்டனர்.

இந்திய தேசத்தில் மைய அரசாக அவர்கள் இருக்கிறார்கள், என்பதற்காக எதை வேண்டுமானலும் சொல்ல முடியும்.! செய்ய முடியும் என்றால் அதற்குப் பெயர் சர்வாதிகார மமதை அல்லது ஜனநாயகப் படுகொலை என்பதைத் தவிர வேறில்லை.

இதைத்தான், பொதுத்தளங்களில் பயணிக்கும் நான் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தாக தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகின்றனர். அது இப்போது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது’’ என்று பாஜகவை கடுமையாகத் தாக்கியிருக்கிறார் அமீர்.

மேலும் அவர் தமிழக அரசை நோக்கியும் சில கருத்துகளை முன் வைத்துள்ளார்.

“அதிகாரம் அவர்கள் கையில் இருக்கின்ற காரணத்தினால், தவறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயகத்தை காக்க முயலுகின்ற ஊடகத்தின் மீதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுமைகளின் மீதும் வழக்கு தொடுத்திருப்பது தமிழக மக்களின் நெஞ்சங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.

நியாயப்படி, என் மீதும் புதிய தலைமுறை செய்தியாளர் மீதும், அத்தொலைக்காட்சி மீதும் போடப்பட்டிருக்கிற வழக்குகளில் எள்ளளவும் உண்மைத் தன்மையில்லாத காரணத்தால் அவ்வழக்கை வாபஸ் பெறுவதோடு மட்டுமல்லாமல், தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். “சத்தியமே வெல்லும்” என்ற வார்த்தையை தன்னுடைய இலச்சினையில் பொறித்திருக்கிற தமிழக அரசு கூடிய விரைவில் அதைச் செய்யும் என்று நம்புகிறேன்.

அப்படி நடக்காத பட்சத்தில், சட்டப்படி நீதிமன்றத்தை நாடி வழக்கை சந்தித்து அங்கு நடந்த உண்மைகளை வீடியோ காட்சிகள் மூலமும், சாட்சியங்களின் வாயிலாகவும் நிலைநாட்டி வெற்றி பெறுவதோடு, மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இவ்வழக்கை அமைத்துக் கொள்வேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார் அமீர்.

இத்தோடு அறிக்கையை நிறுத்தவில்லை அவர். நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் போது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தெஹ்லான் பாஹவி என ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார் அமீர்.

மேலும் ஆம் ஆத்மி கட்சி, மக்கள் பாதை, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட், தீக்கதிர் நாளேடு, திரைப்பட இயக்குனர்கள் - கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் எண்ணிலடங்கா பத்திரிகை மற்றும் காட்சி ஊடக சகோதரர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த விரிவான அறிக்கையைத் தயாரிக்கும்போதே, ‘கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி பாஜகவின் பாசிச போக்கை எதிர்த்து மேடைகளில் பேசி வருகிறாரோ, அதேபோல இனி நானும் தமிழகத்தில் செய்ய இருக்கிறேன். கருத்து சொல்லக் கூட தடுக்கும் அவர்களை விட்டால் இனி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே சினிமா ஒருபக்கம் இன்னொரு பக்கம் பாஜகவுக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் கலந்துகொண்டு முழங்குவது என்று முடிவெடுத்துள்ளேன். அதனால்தான் ஒவ்வொரு கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறேன்’’ என்று தனது நண்பர்களிடம் கூறியுள்ளார் அமீர்.

அதனால் அமீரை இனி பாஜகவுக்கு எதிரான பல மேடைகளில் பார்க்கலாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon