மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சில்லறை விற்பனைப் பணவீக்கம் உயர்வு!

சில்லறை விற்பனைப் பணவீக்கம் உயர்வு!

நுகர்வோர் விலைக் குறியீடு உயர்ந்ததால் மே மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 4.87 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.58 சதவிகிதமாக இருந்தது. இதில் கிராமப் புற சில்லறைப் பணவீக்கம் 4.67 சதவிகிதமாகவும், நகர்ப்புற சில்லறைப் பணவீக்கம் 4.42 சதவிகிதமாகவும் இருந்தது. இந்நிலையில் மே மாதத்துக்கான சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் கிராமப் புறத்தில் 4.88 %, நகர்ப்புறத்தில் 4.72 % என மொத்தம் 4.87 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. காய்கறி, பழங்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்ததன் விளைவாகவே சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாகப் பழங்களுக்கான விலை 12.22 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவற்றின் விலை ஏப்ரல் மாதத்தில் 9.65 சதவிகிதம் மட்டுமே உயர்ந்திருந்தது.

அதேபோல, காய்கறிகளின் விலை 7.29 சதவிகித்திலிருந்து 8.04 சதவிகிதமாகவும், எண்ணெய்களின் விலை 2.11 சதவிகிதத்திலிருந்து 2.46 சதவிகிதமாகவும், எரிபொருட்களின் விலை 5.24 சதவிகிதத்திலிருந்து 5.8 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. எனினும், புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான மீன், முட்டை, பால் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலை முந்தைய மாதத்தை விடக் குறைந்துள்ளது. பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதால் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இம்மாதத் துவக்கத்தில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, 6.25 சதவிகிதமாக நிர்ணயித்திருந்தது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்க விகிதம் 4.8% முதல் 4.9% வரையில் இருக்கும் எனவும் கணித்திருந்தது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon