மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சூர்யாவுடன் இணையும் கவுதம்

சூர்யாவுடன் இணையும் கவுதம்

நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா மற்றும் கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. 2003ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க திரைப்படமும் சரி, 2016ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படமும் சரி, சூர்யாவின் நடிப்பில் வேறொரு பரிணாமத்தை ஏற்படுத்தின. இவ்விரு படங்களையும் இளைஞர்கள் கொண்டாடினார்கள். மேலும், வாரணம் ஆயிரம் திரைப்படம் அந்த ஆண்டுக்கான சிறந்த பிராந்தியப் படத்திற்கான தேசிய விருதும் பெற்றது.

இந்த நிலையில் கவுதம் மேனன் தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கான அடுத்த கட்டப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர்கள் இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்க உள்ளது. மேலும், இதற்குமுன் இவர்களது கூட்டணியில் வெளியான படங்களின் வெற்றியினால் மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்றும் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இதில் நடிகர் விக்ரமிற்கு பதில் சூர்யாவைத்தான் முதலில் திட்டமிட்டிருந்தார் கவுதம். இந்தப் படம் இந்த வருடம் இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் என்ஜிகே திரைப்படத்தை இவ்வருடம் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்திலும், சுதா கொங்கார இயக்கத்திலும் நடித்த பின் கவுதம் மேனன் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon